ஒழுவிலொடுக்கம்

72. மேலைச் சுகம் வெறுத்து மேலொடுகீ ழற்றுவெறுஞ்

மேலைச் சுகம் வெறுத்து மேலொடுகீ ழற்றுவெறுஞ்
சாலப்பொய் யாயுடலார் தானார்தன் – மூலமா
ரென்றுதெரி விப்பாரை யெய்து வோ மென்றிரண்டா
யொன்றுபடத் தேட்டமுதிக் கும்.

(இ-ள்.) மேலைச் சுகம் வெறுத்து மேலொடு கீழ் அற்று வெறும் சாலப் பொய் ஆய் உடல் ஆர் தான்ஆர் தன்மூலம் ஆர் என்று- மேலாகிய வனிதாதி சுகங்களை வெறுத்து, மேல் அடையும் பதமுத்திகளினும் பூலோக போகத்தினும் விருப்பற்று, அவைகளை எல்லாம் மிகவும் வெறும் பொய்யாய்க்கண்டு, இவ்வுடல் தான் யாது? இதனுள் இருந்த நான் யாவன்? எனக்கு முதலாய் உள்ள பதியாது? என்று விசாரித்து, (இவை எம்மால் அறியக் கூடுவதில்லை ஆகலின்),

தெரிவிப்பாரை எய்துவோம் என்று இரண்டு ஆய் ஒன்றுபடத் தேட்டம் உதிக்கும் – இவற்றை அறிவிக்கும் ஞானாசாரியரை அடைவோம் என்று கருதித் தான் என்றும் சிவம் என்றும் இரண்டாய்ப் பகுத்தறிவது ஆய் பின்னர் அச்சிவத்தோடு ஒன்றாக இங்ஙனம் பகுத்தறிவிது ஒன்றாக்கும் அந்த ஞானாசாரியர் எங்குளர் என்று தேடுந்தேட்டம் பிறக்கும்.

(வி-ரை.) முன்போல் மெய்யாய்த் தோன்றாமையின் “வெறுஞ்சாலப் பொய்யாய்” என்றார்.

இத்திருவெண்பாவால் பக்குவர்க்கு ஞானாசாரியரைத்தேடுந்தேட்டம் இங்ஙனம் பிறக்கும் என்று அறிவித்தவாறு காண்க.