வேர்க்குங்கண் ணீர் ததும்புங் கம்பிக்கு மெய்ந்நடுங்கும்
வார்த்தை நழுவு மனம்பதறுங் – கார்க்கதமாய்க்
காந்து முரோமாஞ் சலியாகுங் காதலித்தார்க்
கேய்ந்தகுணங் காணிவையெட்டும்.
(இ-ள்.) வேர்க்கும் கண் நீர் ததும்பும் கம்பிக்கும் மெய் நடுங்கும் வார்த்தை நழுவும் மனம் பதறும் கார்க்கதம் ஆய் காந்தும் உரோமாஞ்சலி ஆகும்-உடற்கண் வேர்வை அரும்பும், கண்களில் ஆநந்த நீர் பெருகும், உள்ளம் நடுங்கும், உடல் நடுங்கும், வசனம் குழறும், ஆசாரியரை என்றைக்கு அடைவோம் என்று மனம் விரைந்து நாடும், மேகம்போல் உள்ளே குமுறி உளமெல்லாம் வெதும்பும், உடல் மயிர்க்குச் செறியும்;
இவை எட்டும் காதலித்தார்க்கு ஏய்ந்த குணம் – ஆகிய இவை எண்வகையும் ஞானாசாரியரை விரும்பித்தேடுவோர்க்கு இயைந்த குணங்களாம்,
காண் – அசை.
இத்திருவெண்பாவால் ஞானாசாரியரைத் தேடும் போது பிறக்குங்குணம் அறிவித்தவாறு காண்க.