பதியிறக்கக் கேட்டிறந்த பத்தினிபோற் பால்போ
லதிமோகி தீப்புகல்போ லன்பாம் -விதவையர்போற்
கன்னன் கடையிற் கொடைபோலக் காணலாந்
தன்னையிழ வாதிழத்த றான்.
(இ-ள்.) பதி இறக்கக் கேட்டு இறந்த பத்தினி போல் பால்போல் அதிமோகி தீப்புகல்போல்- பதி இறந்தான் என்று பிறர் கூறக்கேட்ட அக்கணத்தில் தானும் இறந்த பதிவிரதை போலும், கடைகாலில் இருந்து கவிழ்ந்த பால் போலும், தனது புருடன் மேல் அதிமோகியாயிருந்துளாள் அவன் இறந்தகாலத்து அவனோடும் அக்கினிப் பிரவேசமாதல் போலும்,
அன்பு ஆம் விதவையர்போல் கன்னன் கடையில் கொடைபோலத் தன்னை இழவாது இழத்தல் காணல் ஆம் – புருடன் இறந்துபோய பின்னரும் முன்னர் அன்பு விடாதிருந்த விதவையர்போலும், மறுமை குறித்து ஈட்டிய புண்ணியமெல்லாம் ஓர் அந்தணனுக்குக் கன்னன் தன் தேகாந்தியத்திற் கொடுத்த கொடைபோலும், ஆசாரியர் உபதேசித்த மொழிகளை உட்கொண்ட பக்குவர் தம்மை ஒழியாது ஒழித்தற்கு முறைமையைக் காணப்படும்.
(வி-ரை.) கேட்ட அக்கணத்து இறந்தாளைப்போல் உபதேசமொழியைக் கேட்ட அக்கணத்தில் போதமிறத்தலின், “பதியிறக்கக் கேட்டிறந்த பத்தினிபோல்” என்றும் பால் எல்லாங்கவிழ்ந்தது ஆயினும் அதனுள் வாசனை இருத்தல் போல் போதம் இறந்தது ஆயினும் அப்போத வாசனை யிருத்தலின், “பால்போல்” என்றும், சிலநாழிகை சென்ற பின்னர்த் தீப்புகல்போல் சிலநாளில் போதம் இறத்தலின், ‘அதிமோகி தீப்புகல்போல்” என்றும், புருடனோடு இறவாதிருந்து தேகபோகங்களை வெறுத்து இருத்தல்போல் யான் எனது என்று எழும்போத எழுச்சியை அடக்கியிருத்தலின், “விதவையர்போல்” என்றும், ஒன்றையுங் குறியாது கொடுத்தல்போல் ஒன்றையுங் கருதாது எல்லாவற்றையும் விடுத்தலின், “கன்னன் கடையிற் கொடைபோல்” என்றுங் கூறினார்.
தான் – அசை.
இத்திருவெண்பாவால் ஆசாரியர் உபதேசித்தபொருளை உட்கொண்ட பக்குவர் தற்போதம் ஒழிக்கும் முறைமையை இங்ஙனமென்று அறிவித்தவாறு காண்க.