மாற்றுப் பலவகையாம் பொன்னோட வைப்பான் போற்
றேற்றிச் சிவாகமத்தாற் செப்புகினு – மேற்ற
பரிபாகத் தாலே பழுப்பாம் பலவும்
மொருபாக மன்றென் றுணர்.
(இ-ள்.) பலவகை ஆம் பொன்மாற்று ஓட வைப்பான் போல் சிவாகமத்தால் தேற்றிச் செப்புகினும்- பலவகையாய்த்தோற்றும் மாற்றுப்பொன்களைப் பத்து மாற்று ஆக்குதற் பொருட்டுப் புடம் போடும் ஒருவனைப்போலும், பக்குவர் நால்வர்க்கும் ஓர் படித்தாற் சிவாகமத்தாற்றெளி வித்துக் கூறினும்,
ஏற்ற பரிபாகத்தாலே பழுப்பு ஆம் பலவும் ஒருபாகம் அன்று என்று உணர் – மாற்று ஏற்றமாயிருந்த பொன் பரிபாகத்தால் முன் பழுப்பாகும் அன்றிக் குறைந்த மாற்று உயர்ந்த மாற்றுக்களாகிய பலபொன்களும் ஒருபாகமாய் பழுப்பாகுவதன்று. அதுபோல, உயர்ந்த பக்குவனுக்கு முன்னர் ஞானம் ஏறுமன்றி எல்லார்க்கும் ஓர் பிரகாரமாய் ஞானம் ஏறாதென்று அறிதி.
(வி-ரை.) தாழ்ந்த மாற்றுப்பொன்களைப் புடம் போடுந்தோறும் எடை குறைந்து மாற்றுயர்தல்போல, தாழ்ந்த பக்குவர்க்குச் சிவாகமத்திற் கூறும் நானா உபாய யுத்திகளை உபதேசிக்குந்தோறும் பாசங் குறைந்து ஞானமேறும் என்பதுங் காண்க.
இத் திருவெண்பாவால் ஆசாரியர் உபதேசிக்கும் மொழி ஓர் பிரகாரம் ஆயினும் பக்குவ உயர்ச்சி தாழ்ச்சிப்படி ஞானம் ஏறுவதன்றி ஓர் படித்தாய் ஞானம் ஏறாதென்று அறிவித்தவாறு காண்க.