ஒழுவிலொடுக்கம்

8. தேனுண் டுமிழுந் திறம்போற் சிவாநந்த

தேனுண் டுமிழுந் திறம்போற் சிவாநந்த
மோனந் துளும்பி மொழிகாலத் தேநின்று
தோன்றிருது போலுமொன்றைச் சுட்டாது கேட்பவர்கட்
கான்ற தவம் வேத மது.

(இ-ள்.) தேன் உண்டு உமிழும் திறம்போல் சிவாநந்த மோனம் துளும்பி மொழி காலத்தே தேனை நிறைய உண்டு அதனை மீட்டும் கக்குந்தன்மை போல், உட்புறனாய் எங்கும் நிறைந்து மௌனமாயிருந்த சிவாநந்த வெள்ளம் காருணியத்தால் ததும்பி ஞானாசாரியர் உபதேச மொழிகளைக் கூறுங் காலத்தளவும்,

நின்று தோன்று இருது போலும் ஒன்றைச் சுட்டாது கேட்பவர்கட்கு ஆன்ற தவம் வேதம் அது பணிவிடை செய்து நின்று, தோன்றப்பட்ட இருது காலம் போலும் அது இது என்று ஒன்றையுஞ் சுட்டாது பதைப்பற இருந்து அதனைக் கேட்பவர்களுக்கு, மாட்சிமைப்பட்ட தவமுடிவும் வேதமுடிவும் அங்ஙனம் நின்று கேட்குங் கேள்வியாம்.

(வி-ரை.) ஆசாரியர் மாணாக்கனது பக்குவம் அறிந்து வலியக்கூறுதலே அன்றி அவரை இவன் வலியக்கேட்க லாகாது ஆகலின், “மோனந்துளும்பி மொழிகாலத்தே”என்றும், இருதுவில் பத்திர புட்ப பலாதிகள் தோற்றினும் அவ்விருது விகாரம் இன்றி இருந்தாற்போலக் கருவிகளோடுங் கூடியிருந்தும் அவற்றுள் தாக்கற்று நின்று கேட்க வேண்டும் ஆகலின், “இருது போலுஞ்சுட்டாது கேட்பவர்கள்” என்றுங் கூறினார்.

மோனந்துளும்பி மொழிகாலத் தென்றமையானும்,ஒன்றைச் சுட்டாது கேட்பவர்க ளென் றமையானும், சொல்லாமற் சொன்னதென்றும் கேளாமற் கேட்டதென்றும் ஆயிற்று.

சுட்டறநிற்க வந்தது தவப்பயன் ஆகலின், அதனைத்தவம் என்றும், அங்ஙனம் நின்று கேட்கும் மொழியாகலின், அதனை வேதம் என்றுங் கூறினார். அங்ஙனஞ் சொல்லுவதும் இங்ஙனங் கேட்பதும் சாம்பிரதாயம்.

இத்திருவெண்பாவால் ஆசாரியன் உபதேசங்கூறுமாறும் மாணாக்கன் ஏற்றுக்கொள்ளுமாறும் அறிவித்தவாறு காண்க.