இருளிற் சுடரென்ன விந்திரவி யென்ன
வருளைக் கடந்தபரா நந்தர் – திருவாக்
கமுதமழை யம்பரச்சொ னன்னிமித்த மாங்கே
மமதையிரா தென்றே மதி.
(இ-ள்.) இருளில் சுடர் என்ன இந்து இரவி என்ன அருளைக் கடந்த பராநந்தர் திருவாக்கு- பூத இருளின்கண் தோற்றும் விளக்குப்போலும் சந்திரன் போலும் சூரியன் போலும் பிரகாசித்து, ஆணவ இருளை நீக்குந் திருவருளையுங் கடந்து, சிவாநந்தமயமாய் எங்கும் நிறைந்துள்ள ஞானாசாரியரது அழகிய வசனம்,
அமுத மழை அம்பரச்சொல் நல் நிமித்தம் ஆங்கே மமதை இராது என்றே மதி- அமுதமழைபோலும் ஆகாசவாக்குப்போலும் நல்ல நிமித்தம்போலுமாம், அன்றி அதன் கண் சிறிதேனும் அகங்காரம் உண்டாகாதென்று அறிதி.
(வி-ரை.) அருள் தோற்றுங்கால் மூவிதமாய்த் தோற்றலானும், ஒன்றற்கொன்று அதிகமாய்ப் பிரகாசிக்கையானும், விளக்காதி முச்சுடரையும் உவமையாகக்கூறினார்.
இதனைத் தத்துவப்பிரகாசம் ‘பொறிகரணங்களையுயிர்போற் போதம்போ தத்தைப் பொருந்திநடத்திடுஞ்செயலாற் போதவுணர் வுணர்ந்தே, அறிவினது செயலோ நாமென வுணர்வுற்றிருப்ப வப்போது விளக்கெனவு மருணன்மதியெனவும், கறைவிடியுங்காலமெனவொளிவந்துற்பவிக்கும்’ என்பதனானுங் காண்க.
நீர் மழை கைம்மாறின்றிப் பொழியினும் உற்பத்திநாசம் உளவாகலின், அம்மழையை உவமை கூறாமல் அழதமழை என்றும், ஆகாசவாக்கு உண்மை அறிவித்தல் போல் உண்மையாகிய சிவத்தை அறிவித்தலின், அம்பரச்சொல் என்றும், நல்ல நிமித்தங் கேட்டோர்க்குத் தாங்கருதிய பொருள் கைகூடல்போல் இதனைக்கேட்டோர்க்குத்தாம் கருதிய வீடு கை கூடுதலின், நன்னிமித்தம் என்றுங் கூறினார்.
தற்போதத்தாற் கூறும் சொற்கட்கெல்லாம் மமதை இருத்தலின், “ஆங்கே மமதையிராது’’ என்றார்.