இரும்பை வடிவாக்கு மியல்பினர்க்குப் பச்சை
மரஞ்சுடுமா போன் ஞானம் வாய்க்கு – மிருந்தவிட
நீர்த்தா மரையிலைபோ னீங்கு முலகமெலாம்
பேய்த்தேர் போறோன்றும் பிரிந்து.
(இ-ள்.) இரும்பை வடிவு ஆக்கும் இயல்பினர்க்குப் பச்சைமரம் சுடுமாறு போல் ஞானம் வாய்க்கும் – இரும்பினை ஓர்பாவை வடிவாக்கும் முறைமைபோல் பாசத்தை நீக்கி அருள் வடிவாக்கப்பட்ட மந்ததர பக்குவர்க்குப் பச்சைமரத்தை அக்கினியால் சுடுமாறு போல் ஞானம் பலிக்கும்;
இருந்த இடம் தாமரையிலை நீர்போல் நீங்கும் உலகம் எலாம் பிரிந்து– பேய்த்தேர்போல் தோன்றும் தாம் இருந்த இல்வாழ்க்கையில் தாமரையிலை நீர்போல் கூடியிருந்தும் அதிற் கூடாது நீங்குவர் , பிரபஞ்சமெல்லாம் அவர்க்கு அந்நியமாகக் கானற்சலம்போல் தோன்றும்.
(வி-ரை.) சில காட்டத்தால் பச்சைமரம்சுடல்போல சில உபதேச மொழிகளால் இவர்க்கு ஞானம் ஏறும் என்பதறிக.