மரப்பாவை போலுடம்பின் வாதனையை மாற்றிக்
கரித்தீக் கவர்வதுவாங் காமித் – திருத்த
மனைபொதுவின் மண்டபமாம் வானோர்கள் வாழ்வுங்
கனவெனவே தோன்றியிடுங் காண்.
(இ-ள்.) மரப்பாவை போல் உடம்பின் வாதனையை மாற்றிக் கரித்தீக் கவர்வது ஆம் – மரத்தினை ஓர் பாவை வடிவாக்குதல் போல், அருள் வடிவாக்குதற் பொருட்டுத் தீவிர பக்குவர்க்கு உடம்பின் வாதனையாய பொறிகரண முதலியவற்றை நீக்கி ஞானத்தை உணர்த்தக் கரி தீ ஏற் றுக்கொள்ளல் போல் ஞானம் உண்டாம்;
காமித்து இருந்த மனை பொதுவின் மண்டபம் ஆம் வானோர்கள் வாழ்வும் கனவு எனவே தோன்றியிடும் – தான் இச்சித்திருந்த மனைவாழ்க்கை நானாபேருங் கூடியிருக்கும் பொதுமண்டபம் போலாகும், கேள்வியால் அறியப்பட்ட இந்திராதி தேவர்கள் செல்வமும் சொப்பனம்போல் தோற்றும்,
(வி-ரை.) உடம்பின் வாதனையை மாற்றி என்றமை யான், இவர்க்குப் போக வாதனை மாற்ற வேண்டுவது இன்றென்பது ஆயிற்று. “வானோர்கள் வாழ்வுங் கனவெனவே தோன்றும்” என்றமையான், நரர்வாழ்வு சுழுத்திக்காட்சி போல் தோன்றும் என்பதாயிற்று.
இருந்த என்பது இருத்த என்று வலித்தல் விகாரமாய் வந்தது.
காண் – அசை.