ஒழுவிலொடுக்கம்

83. வெண்ணெயுறு பாவையர்க்கு ஞானம் விளக்கின்மே

வெண்ணெயுறு பாவையர்க்கு ஞானம் விளக்கின்மே
லண்ணின் மயிர் பஞ்சாகு மாசையிலை – கண்ணீ
ரொழுகும் பொழுதறியா துள்ளுருகி விம்மி
யழுது சிரிப் பார்புளகமாம்.

(இ-ள்.) வெண்ணெய் உறு பாவையர்க்கு ஞானம் விளக்கின் மேல் அணில் மயிர் பஞ்சு ஆகும் ஆசை இலை- வெண்ணெயினைப் பொருந்தாநின்ற ஓர் பாவை ஆக்குதல் போல் அருள் வடிவாக்கப்பட்ட தீவிரதரபக்குவர்க்கு விளக்கின் கொழுந்திற் பிடித்த அணிலின் மயிர்போலும் பன்னிய பஞ்சுபோலும் பாசநீங்கி ஞானம் உண்டாம், அவர்க்கு ஒன்றினும் ஆசை இன்று ;

கண் நீர் ஒழுகும்பொழுது அறியாது உள் உருகி விம்மி அழுது சிரிப்பார் புளகம் ஆம் – ஆநந்தக்கண்ணீர் ஓடும் போது தாமறியாது உள்ளமெல்லாம் நெக்கு நெக்குருகி விம்மி விம்மி அழுது சிரிப்பார், அவர்க்கு உடம்பெல்லாம் உரோமாஞ்சலி ஆம்.

(வி-ரை.) அழுவது முன்பட்ட பிறவித் துன்பங்களை நோக்கி, சிரிப்பது துன்பங்களை எல்லாம் ஒரு கணத்தில் மாற்றிய ஆசாரியரது அதிசயத்தை நோக்கி எனக்கொள்க.

பிரபஞ்சத்தின் மேல் இல்வாழ்க்கை மேல் உடம்பின் மேல் ஆகிய மூன்றிடத்தும் அவர்க்கு ஆசை இன்மையால், பொதுப்பட ” ஆசையிலை” என்றார்.

கல்லை என்னும் திருவெண்பா முதல் இந்நான்கு திருவெண்பாவானும் மந்த முதலிய நான்கு பக்குவங்களையும் உடையோரை ஞானாசாரியர் பக்குவப்படுத்தி அவர்க்கு ஞானம் ஏற்றும் முறைமை இங்ஙனம் என்று அறிவித்தவாறு காண்க.

இங்ஙனம் கூறும் பக்குவர்க்கே அன்றி மற்றையர்க்கு ஞானம் போதித்தல் ஏறாதோ எனின், மேற் கூறுகின்றார்.