ஒழுவிலொடுக்கம்

89. தன்னையிழப் பார்க்கென்ன சார்வூழி சங்கார

தன்னையிழப் பார்க்கென்ன சார்வூழி சங்கார
மென்னிலொளித் தெங்கே யிருக்கலா – முன்னே
புலிபார்க்கப் போனகதை போலிமையா நாட்டஞ்
சலியாமன் மூடுந் தனை.

(இ-ள்) தன்னை இழப்பார்க்குச் சார்வு என்ன ஊழி சங்காரம் என்னில் ஒளித்து எங்கே இருக்கல் ஆம் – தற்போதம் ஒழிப்பார்க்கு மற்றைச்சார்புகள் என்னை உள்ளன? முப்பத்தாறு தத்துவம் என்பதும், அவற்றின் முடிவில் நின்ற தாம் என்பதும், தமக்கு அறிவித்த அருள் என்பதும், இதனைக் கடந்த ஆநந்தம் என்பதும் இன்றி ஆநந்தாதீதரா யிருத்தலின், அவர்க்கு இதுவே சர்வசங்காரகாலமென்று மெய்ஞ்ஞானிகள் சொல்லுவார் எனின், அவர்க்கு எவ்விடத்து ஒளித்திருக்கலாகும்? (ஆனால் சிவத்தை அருளால் அறிந்து அடையவேண்டும் என்பது என்னை எனின்),

முன்னே புலிபார்க்கப்போன கதை போல் தனை இமையா நாட்டம் சலியாமல் மூடும் – முன்னே புலியினைப் பார்த்து அறியச்சென்று ஓர்புருடன் அஃதிருந்த முழைக்கு எதிர்ப்படும் தறுவாயில் அவன் தேகப்பதைப்பற அது பிடித்துக்கொண்டதென்று கூறும் கதைபோல், சிவத்தை அறிய வேண்டும் என்று முப்பத்தாறு கருவிகளையும் கடந்து சென்று அருள் நேர் நிற்கும் தறுவாயில் இவன்றன்னை இமையா நாட்டமாகிய அச் சிவந்தானே இவனது போதப் பதைப்பு அறும்படி மூடிக்கொள்ளும்.

(வி-ரை.) இமைத்தல் விழித்தல் இன்றிய இமையா நாட்டம்போல் மறப்பு நினைப்பு இன்றிய பேரறிவு ஆகலின், சிவத்தை “இமையா நாட்டம்” என்றார். புலி முழைவாய் நின்றோரை அது மூடிக்கொளல்போல், அருள் நேர் நின்றோரைச் சிவம் மூடிக்கோடலான், அங்ஙனம் உவமை கூறினார்.

“அறிவு மறிவானும்” என்னுந்திருவெண்பா முதல் இவை மூன்று திருவெண்பாவானும் தற்போதம் இழந்த ஞானிகள் சிவமயமாயிருப்பாரே அன்றி அவரை மீட்டும் பாசம் மயக்காது என்று அறிவித்தவாறு காண்க.