அறிந்ததுவாய் நின்ற வறியாமை கண்டு
மறந்தறியார் வாழாது வாழ்ந்த – வெறும்பாழ்
விளைந்தசுகஞ் சொல்லில் வெளியைப் படியா
லளந்தறியு மாபோல வாம்.
(இ-ள்.) அறிந்து அது ஆய் நின்ற அறியாமை கண்டு மறந்து அறியார் வாழாது வாழ்ந்த- முப்பத்தாறு கருவிகளையும் நீங்கி அவற்றின் முடிவில் நின்ற தம்மை அருளால் அறிந்து, அவ்வருள் தரிசனம் பரை தரிசனம் ஆநந்தப்பேறு ஆகிய இவற்றையும் கடந்து சிவமயமாய் முன் நீங்கி நின்ற கருவிகளை மீட்டுங்கண்டு அச்சிவத்தை மறந்து பின்னும் இக்கருவிகளை நீக்கி அச்சிவத்தை அறியாதார் இப்பிரபஞ்சம் சிறிதும் தோன்றாது அச்சிவத்தோடும் வாழ்வற வாழ்ந்த,
வெறும் பாழ் விளைந்த சுகம் சொல்லில் வெளியைப் படியால் அளந்து அறியுமாறுபோல ஆம் – ஓர் பொருளோடும் தொடர்வு இன்றிய வெற்றவெறுஞ் சூனியத்தில் உண்டாகிய பேராநந்தத்தைச் சொல்கோம் எனின், ஆகாயத்தை நாழியால் அளந்து அளவிடுமாறு போலுமாம்.
(வி-ரை) “அறியாமை கண்டு மறந்தறியார்” என்றமையால் கருவிகளின் மீளாது சிவமயமாய் எக்காலமும் இருப்பார் என்பதாயிற்று. வெளியை அளக்கும் படிக்குள் அவ்வெளி நிறைந்திருத்தலின், அதனை அளக்கக்கூடாது. அது போல், கருதிக்கூறும் மனவாக்கெல்லாம் அவ்வாநந்தம் நிறைந்திருத்தலின், அதனைக் கூறக்கூடாதென்பது அறிக.
இத்திருவெண்பாவால் அங்ஙனம் இருந்த ஞானிகள் பெற்ற இன்பத்தை இங்ஙனம் இருக்குமென்று அவரால் கூறக்கூடாதென்று அறிவித்தவாறு காண்க.