ஒழுவிலொடுக்கம்

ஒழிவிலொடுக்க நூலுரைத்தான்

ஒழிவிலொடுக்க நூலுரைத்தான் என்பதில் வேற்றுமை சாரியை யுருபு முதலியவொன்றும் விரியாது நிற்றலின், ஞானாசாரமன்றிக் கருமாசார மொன்றும் விரியாத இந்நூலின் நின்மலத்தன்மை தோன்றிற்றென்றுணர்க. உரைத்தான் என்பது – ஒருவர் மதி நுட்பத்தால் தான் கண்டறிந்த மாற்றுயர்ந்த பொன்னின் தன்மையைப் பிறருமறிந்து பயன் கோடற்குக் கட்டளைக்கல்லி னுரைத்துக் காட்டல் போல்,

சுருதி குரு அனுபவத்தால் தாம் அனுபவித்தறிந்த சிவானந்தப் பேற்றின் தன்மை யைப் பக்குவருமறிந்து பயன்கோடற் பொருட்டு நூற்கண்  உரைத்துக் காட்டினார் என்று குறிப்புறுத்திற் றென் றுணர்க.

என்னெனின் உரைபென்பது பொன்னுரையும் பொருளாகக் கோடலினென்க. உரைத்தான் என்னும் பயனிலை செயப்படு பொருளின் இறுதியின் இயையாது செயப்படுபொருட்குங் கருவிப் பொருட்குமேல் தாடலை மேல் வைத்து என்பதன் இறுதியில் தொடர்ந்து நின்றது என்னெனின், சிவஞானத்தீக்கை யுடையராய் உரைத்தாரென்பதுமன்றித் தமது ஆசாரியர் திருவடி சான்றாகத் தாங்கண்ட அனுபவத்தை விளங்க உரைத்தார்  என்பதுங்குறித்தற்கென்க. என்னை? தாடலைமேல் வைத்து எனவே சான்றாகவைத்து என்பது தானேயமையுமாகலின்.

தலைமேல் வைத்து என்பதன் பின் நிற்கக் கடவதாய ஓர்ந்து என்பது செயப்படு பொருட்பின் இறுதி நிலையாய் நின்றது என்னெனின், இந்நூல் கற்றோர்க்குக் கருமங்குறைந்து ஞானம் மேலிடுதலுண்மை குறித்தற் கெனக. எங்ஙனமெனின், அவ்வோர்ந்து என்பது வினைக்குறையாகலின் என்க.

உள்ளத்தழுவிலடுக்குந்தேனை யன்பரெலா முண்ண ஒழிவிலொடுக்க நூலோர்ந் துரைத்தான் எனக்கொண்டு போதவொழிவின் கண் அடுப்பதாய ஆனந்தத்தை அன்பெரெல்லாம் அனுபவிக்கும் பொருட்டு வேதாகம முடிபான ஞானநெறியை ஆராய்ந்து ஒழிவிலொடுக்கம் என்று ஓர் நூலை உரைத்தார் எனப்பொருள் கூறுவாருமுளர்.

அங்ஙனங்கூறின் ஆசிரியர் பரஞானமுடையாரென்பது தோற்றாது, அபரஞான முடையாராகப் பொருள்படும் ஆகலினும், அபரஞானத்தாற் கூறப்பட்ட நூல் மிகச் சிறவாமையானும் ; அது பொருந்தாதென்க.

இந்நூலியற்றற்கேற்ற நற்பொருளுடைமையுஞ் சிறப்புப்பாயிர இலக்கணத்துள் ஆக்கியோன் பெயரேயென முதனிருத்தப்பட்ட நிமித்த காரணச் சிறப்புடைமையும் , இச்செய்யுண் முடிபுக்கு எழுவாயாந்தலைமை யுடைமையும் பற்றி வள்ளல் என முதல்  நிறுத்தியதென்க.

இந்நூலாசிரியர்க்கு ஆசாரியர் இவரென்பது தோன்றற்கு அவ்வள்ளல் என்பதன்புடை குருராயன் என்பதை நிறுத்தியதென்க.

இங்ஙனம் ஆசாரியரென்பவர் பிள்ளையார் என்பது தோன்றற்கு ஞானசம்பந்தனென வைத்தல் வேண்டுமாகலின் அந்த ஞானத்தைக் குறிக்கும் பாசவெற்றியாய வாதுவென்ற வென்பது முன்கூடிச் சம்பந்தனென  அதன் புடை நிறுத்திய தென்க.

இரண்டாமடிக்கண் பிள்ளையார் தாள்கள் நிறுத்தத் தொடங்கி முன்னர் அத்தாள்களின் இயற்கை அருளென்று குறிக்க வள்ளலென்றும், அதன்வடிவம் ஆனந்தமென்று குறிக்க மலரென்றும் முறையேவைத்து வள்ளன் மலர்த்தாளென நிறுத்தியதென்க.

தாள்களன்றியும் பிள்ளையாரும் அருளியற்கையரே யென்பது குறிக்கச் சம்பந்தனென்னுஞ் சத்தந்தோற்றியவுடன் வள்ளற் சத்தந்தோன்ற நிறுத்தியதென்க. இங்ஙனம் நிறுத்தியவை சொற்பொருண் முறைநிலை.

தாளென்பதற்குந் தலையென்பதற்குமுள்ள சொற்பொருட் சம்பந்த இன்பம்பற்றித் தாடலையென்றும் தலை யென்பதற்கும் மேலென்பதற்கு முள்ள உரிமை நோக்கம் பற்றித் தலைமேலென்றும், மேலென்னும் இடப்பொருட்கு வைத்தற்றொழில் சிறந்ததுபற்றி மேல்வைத்து என்றும், வைத்து என்பதற்கும் உரைத்தானென்பதற்கும் இறுதியும் முதலும் இனமாதல்பற்றி வைத்துரைத்தான் என்றும் முறையே நிறுத்தியதென்க.

இங்கனம் நிறுத்தியவை சொன்முறை நிலையும் சொற்பொருண் முறை நிலையுமாம்.

இங்கனம் முற்று முறைநிலை கூறப்புகின் மிகப் பெருகுமாகலின் ஒருவாறு காட்டினம். மற்றையவும் இவைகொண்டுணர்க வென்க.

இச்செய்யுட்பொருள் ஆசிரியரது அருளறிவின் மாட்சிமையை வெளிப்படையானுங் குறிப்பானும் விளங்க விரித்தலின், வாகைத்திணையுட் சால்புமுல்லைப் பொருளின்பாற் பட்டதென்க.

என்னை? சால்பு முல்லைப்பொருள்: வான்றோயு மலையன்ன சான்றோர் தஞ்சால்புரைத் தன்று * என்பவாகலின்.

இச்செய்யுள் தன்னுட் செயப்படு பொருளாய் நின்ற நூற்சிறப்பைத் தன்னானுந் தன்னுறுப்புக்களானுங் குறிப்பாற் குறித்து நின்ற நன்னோக்குடைச் செய்யுளென் றுணர்க. அங்ஙனங் குறித்தவை யெங்ஙனமெனின் :

* புறப்பொருள் வெண்பாமாலை, 8. வாகைப்படலம், 31.

இச்செய்யுள்தான் கலிப்பா, வஞ்சிப்பா, ஆசிரியப்பா  என்னும் முப்பாவினுஞ் சிறந்த வெண்பாவாகலின், இக்குறிப்பால் இந்நூல் சரிதை நூல், கிரியை நூல், யோக நூல் என்னு முந்நூலினுஞ் சிறந்த ஞான நூல் என்று குறித்ததென்க.

தான் ஈரசையான் ஆசிட்டு இருவகைத்தளை தழீஇ  ஒழுகிசைச் செப்பலோசையான் வந்ததாகலின், இக்குறிப்பால் இந்நூல் ஆகம முடிவும் வேதமுடிவுங் கூறும்  இருவகை நெறியும் ஒருவகை நெறியாத் தழீஇக் கொண்டிருந்தமை குறித்ததென்க.

தான் ஒன்றடுத்த இரட்டை முப்பத்தாறெழுத்துக்களைக் கொண்டு நிற்றலின், இக்குறிப்பான் இந்நூல் பாசமொன்றடுத்த தத்துவ முப்பத்தாறென்றும் முப்பத்தாறன்றன்மை யிவையென்றும் பகுத்தறிதல்வகையும் உணர்த்துவ தெனக் குறித்ததென்க.

 தான் நான்கடுத்த முப்பத்தாறசைகளை யசைத்து நிற்றலின், இக்குறிப்பான் இந்நூல் அத்தத்துவ முப்பத்தாறனையும் நியதிகளைத் தன்முறையை யுணர்த்துவதெனக் குறித்ததென்க.

அஃதேன் முப்பத்தாறன்மேல் நான்கடுத்ததென்னெனின், ஆன்மதத்துவத்தின் வன்மை தோன்றற்கு  ஓரசையும், வித்தியாதத்துவத்தின் வலி தோன்றற்கு  ஓரசையும் யும், நாததத்துவத்தின் பெருமை தோன்றற்கு ஈரசையும் இருந்தனவென்க.

தான் பதினைந்துசீர் சீர்கொள நிற்றலின், இக்குறிப்பான் இந்நூல் ஆசாரியத்தன்மை, சீடத்தன்மை, பதித்தன்மை, பசுத்தன்மை, பாசத்தன்மை, உபதேசத்தன்மை, பக்குவத்தன்மை, யோகநிவர்த்தி, கிரியை நிவர்த்தி, சரிதை நிவர்த்தி, விரத்தி விளக்கம், துறவுத்தன்மை , அருளவத்தைத் தன்மை, வாதனை மாண்டார் தன்மை, நிலையியல்பு என்னும் இப்பதினைந்தனையுஞ் சீர்பெறக் கொண்டதெனக்குறித்த தென்க.

தான் எழுவகைத்தளையின் இயைந்ததாகலின், இக்குறிப்பான் இந்நூல் ஆன்மதரிசனம், அருட்டரிசனம், பரைதரிசனம் பரையோகம், பரையோக நீக்கம், போதவொழிவு, இன்பப்பேறு என்னும் எழுவகை நிலையும் அறிவிப்பதெனக் குறித்ததென்க.

தான் தனிச்சொல் பெற்று நான்கடியுடன் நடந்ததாகலின், இக்குறிப்பான் இந் நூல் கூறும் ஒப்பற்ற ஞானமும் சுத்தச்சரிதை சுத்தக்கிரியை சுத்தயோகம் சுத்த ஞானம் என நான்கு பாதத்தோடு நடப்பதெனக் குறித்ததென்க.

தான் ஒரூஉத் தொடையொடு முத்தொடையான் இயன்றதாகலின், இக்குறிப்பான் இந்நூற் சுருதி குரு அனுபவமென்னு மூன்றும் ஒத்தியன்றதெனக் குறித்த தென்க.

அல்லதூஉம் இச்செய்யுளடி நேரடியாய் விதித்த எழுத்து எல்லையின் இகவாது நிற்றலின், இக்குறிப்பான் இந்நூல் மெய் வீட்டினெறித் தாய் அவ்வீட்டினெறிக் கெல்லையாய ஞானத்தின் இகவாது நின்ற தெனினுமாமென்க.

எல்லை என்னெனில், பத்தெழுத்தென்ப நேரடிக்களவே, யொத்த நாலெழுத் தொற்ற லங்கடையே * யென்பவென்க.

இங்ஙனம் குறித்தற்கன்றே இச்செய்யுளீற்றடியில் நூற்பெயரை வேறு அடை கொடாது தனிமையின்  இருத்தியதென்க.  * தொல்காப்பியம், செய்யுளியல், 38

இச்செய்யுள் சிறப்புப் பாயிரத்ததாயின் அப்பாயிரத் திலக்கணம்  இதனுளிருந்தவா றெங்கன மென்னின் ,வள்ளலென்பதனால் ஆசிரியர் பெயரும், குருராயன் வாதுவென்ற சம்பந்தன் வள்ளன் மலர்த்தாடலைமேல் வைத்துரைத்தானென்பதனான் ஞானாசாரியராகிய பிள்ளையார் அருளுபதேச வழித்தென உட்கொளப்படுதலின் வழியும், இந்நூற்றொடர் தமிழ்த்தொடராகலின் இத்தமிழ் வழக்கு நிலமே இந்நூல் வழங்கு நிலமெனக் கருதப்படுதலின் எல்லையும், ஒழிவிலொடுக்க நூலென்பதனால் நூற்பெயரும், ஒழிவிலொடுக்கமென அன்மொழித் தொகைப் பெயர் மாத்திரையின்  நில்லாது நூலென விரித்தமையின் இந்நூலுந் தொகைவிரியுடையதெனக் கருதப்படுதலின் யாப்பும், உள்ளத்தழிவிலென்பதனாற் கருதிய பொருளும், அன்பரெல்லாம் உண்ண என்பதனால் அன்பரெலாம் உணற் பொருட்டு இஃதியற்றுக என்று உள்ளெழுந்து எதிரிட்டு நின்றது ஆசிரியரது பெருங்கருணையெனக் கருதப்படுதலிற் கேட்போரும், உள்ளத்தழிவி லடுக்குந்தேன் என்பதனாற் பயனும் புலப்படுமாகலின் அவையிருந்தவாறு இங்ஙனமென்க.

இச்சிறப்புப்பாயிரச்செய்யுள் முற்காலத்தது.

சிதம்பரம் இராமலிங்க பிள்ளையவர்களால்  உரை செய்யப்பட்டது.

ஒழிவிலொடுக்க நூற்கும் சிதம்பர சுவாமிகள் உரைக்கும்

சுவாமிகள்

எழுதிப்பதிப்பித்த குறிப்புகள்

 1. ஒழிவிலொடுக்க நூலின் உரைபாடத்தில் சிலசில இடங்களிலுள்ள மறைச்சொற் பொருட்குத்தெளி சொற்பொருள்.

  1. பொதுவிலுபதேசம். 1-வது ‘ வேதாகமப்பவுரி வீசும் ” என்னும் திருவெண்பா.
  2. பவுரிக்கூத்து – வலமிடமாகச் சூழ்ந்தாடுங் கூத்து.
  3. குறுமன்னியர் – சிலராலறிந்து மதிக்கப்படும் பிரபுத்துவமுடையோர்.
  4. மகாமன்னியன் – பலராலுமறிந்து மதிக்கப்படும் பிரபுத்துவமுடையோன்.
  5. பிரளயாகலர் – மும்மலங்களுள் ஒருமலம் நீத்தோர், அவர் பிரமன் முதலானோர்.

2-வது “தன்னிழப்பை என்ன கற்றுச் சாதிப்பான் என்னும் திருவெண்பா.

  1. ஞாதுரு – காண்பான்; ஞானம் – காட்சி; ஞேயம் – காணப்பட்டது.

3-வது கூலித் தொழிலாளர் என்னும் திருவெண்பா.

  1. சூக்குமைவாக்கு – வார்த்தை தோன்றற்கு முதற்காரணமா யுந்தியிலே நாதவடிவாய் நிற்குமொருசத்தி.
  2. பகடிக்கூத்து – உள்ளது போன்றில்லாததைக் காட்டும் வெளிவேடங் அல்லது அகசியக்கூத்து.

4-வது “குட்டித்திரட்கரடி என்னும் திருவெண்பா

பரஞானம்-அனுபவ ஞானம், அபரஞானம்-வாசகஞானம்.

5-வது குருட்டரிப்பனார்க்கும் என்னும் திருவெண்பா

  1. அரிப்பாளன் – குப்பை முதலிய இடங்களிற் பொன் முதலிய அரித்தெடுக்கின்றோன்.

2.கொழுந்தாடை-கரும்பின்நுனித்தழை.

10-வது சாயாபுருடனைப்போல்” என்னும் திருவெண்பா

சாயாபுருடன் – தந்நிழலைப்பார்த்துப் பின் ஆகாயத்தை உற்று நோக்குகின்றார்க்கு அவ்வாகாயத்தின் கண் புருடவடிவம் போற்றோன்றும் அந்நிழற்காட்சி.

12-வது தாக்கற்ற பூரணத்தில் என்னும் திருவெண்பா

பைமறித்தல் – உள்ளிருந்த சரக்கு வெளிப்படப் பைவாய் தொட்டு உட்புறமேற்பட்டும் வெளிப்புறம்  உட்பட்டும்  அடங்க மடக்கல்.

16-வது – ” ஆலிங்கனத்திலே” என்னும் திருவெண்பா

கிண்கிணிவாய்ச் செய்தலர்தல் – வட்டவடிவாக முகங்கொண்டு மலர்தல்.

21-வது “முலையுண்ணி நீருண்ணும்என்னும் திருவெண்பா

பஃறுளை – பலதுளை.

42-வது தன்மையு முன்னிலையும் என்னும் திருவெண்பா

பற்ற – பார்க்கிலும்.

43-வது “மலையேறிப் போவார்க்கு”  என்னும் திருவெண்பா

அருகித்தோற்றல் – சுருங்கித்தோற்றல்.

52-வது சத்தாதிதத்துவம் போய் என்னும் திருவெண்பா

பிரேரகம் – காரியப்படுதல்.

54-வது தத்துவத்தா ரல்லர் என்னும் திருவெண்பா

பிரதிபலிதம் – எதிர்விம்பம்

56-வது நாயேறி வீழ்ந்தென் என்னும் திருவெண்பா

சகசமலம் – அனாதியாகியமலம்.