ஒழுவிலொடுக்கம்

அன்பரெலா முண்ண

அன்பரெலா முண்ண  என்பதில், அன்பர் என்பது பொருள்புகழாதியைக் குறித்துப் பயில்வோரை நீக்கிச் சிவானந்தம் எந்நாள் அடைதுமென்று இடைவிடாது அதனையே விரும்பிப்பயில்வோரைக் குறித்ததென்றுணர்க. எலாமென்பது சரிதாதிகன்ம மார்க்கங்களைக்கூறும் பிற நூல்களெல்லாம் பருவநோக்காது சாதிசமயாசார விகற்பங்களைநோக்கிச் சிலரை நீக்கியுஞ் சிலரை நிறுவியும் அதிகரித்தல் போலாது, அச்சாதி சமயாதிகளினுயர்ந்தோர் தாழ்ந்தோர் யாரேனும் பருவத்தராயின் இந்நூற்கு உரியராவரென்பது குறித்த தென்றுணர்க.

உட்கொள என்னும் பொருளுட் கொண்டு பொருட்டுப் பொருளிற் போந்த உண்ண வென்னும் வினையெச்சம் ஆனந்தானுபவத்திற்கு விடாத இலக்கணை ஆயிற்றென்றுணர்க. என்னையெனில், உண்ணலிற் பசி நீங்கல்போல் ஆனந்தானுபவத்திற் பசுத்துவம் நீங்கலினென்க.

பயன் காரணம் பற்றி வந்த ஒழுவிலொடுக்க நூல் என்பது ஒழுவிலொடுக்க மென்னு நூல் ஒழுவிலொடுக்கந்தரு நூலென  இருவழிக்கும் பொதுவாய சந்தியான வந்தமையில், தன்னை வேதாந்தத்திற்கும் சித்தாந்தத்திற்கும் பொது வென்று குறித்ததென்றுணர்க.