ஒழுவிலொடுக்கம்

ஓர்ந்து

ஓர்ந்து என்பதில் ஓர் என்னும் பிறவினை முதனிலை, அறிவு தனக்கெதிரிட்ட  உணர்ச்சிப்பொருட்கண் எதிரிடுவது போன்று எதிரிடாது உள்ளாழ்ந்த அப்பொருட்டிறன்  எதிரிடப்பெயரும் புடைபெயர்ச்சியும் எதிரிட்ட பின்னர் விகற்பியாது எதிர்க்குந்தொறும் எதிரிடப்பெயரும் புடைபெயர்ச்சியுங் கோடலிற் கருவித்திறனுந் தன்றிறனும் அருட்டிறனும் உற்றுணர்ந்து அவ்வுணர்ச்சி விகற்பியாது தேறி நின்றமையைக் குறித்தது காண்க.

இக்குறிப்புத் தோன்றவன்றே திருவள்ளுவநாயனாரும் “ஓர்த்துள்ள முள்ள துணரின் ” * என்றாரென்றறிக.

* திருக்குறள், மெய்யுணர்தல், 7.