உள்ளத்தழிவில் என்பதில் உள்ளமென்பதன் பகாப்பதவியிற்றுப் பகுபதப்பொருளினிடவாகுபெயராய் அணுப்பொருட்கண் வந்த உள்ளென்னும் பகுதி உட்புறத்தும் அப்போதம் எழுஞ்சிற்றசைவும் பேரசைவுங்குறித்தது காண்க. உள்ளம் என்பது வாதனையான் உள்ளெழும் போதத்திற்கு ஆகுபெயராயது. வள்ளலென்பது போன்று ஒழுகிசையாய் வரவுள்ள வழிவிலென்னாது பொறுத்திசையாய் வர உள்ளத்தழிவிலென்ற தென்கொலோவெனின்: வேற்றுமை வழியாகலினும் போதவசைவு சார்பின்றி அமையாமை குறிக்கவேண்டு மாகலினும், சாரியையோடு புணர்த்தியங்கனங் கூறியதென்க. அழிவு என்பதில் அழியென்னும் பொது வினைப்பகுதி முன்னர்த்தோற்ற நிகழ்ச்சிப்பின்னர் ஓர் காலத்தும் ஓரிடத்துமின்றிக் கெடுதற் பெயர்ச்சிக்கண் வந்ததாகலின் அப்போத நிகழ்ச்சி பின்னரெக்காலத்தும் உட்புறமென்னு மெவ்விடத்துந் தோற்ற நிகழ்ச்சியின்றி யொடுங்கியவாறு குறித்ததென்றுணர்க. இங்கனமன்றி உள்ளத்தழிவிலென்பதற்கு மனத்தின் அசைவற்றவிடத்தெனப் பொருள் கூறுவாரும் உளராலோவெனின், மனத்தினசைவு போதவசைவு அறின் தானே அறுமாகலினும் அஃதறாதவிடத்து இஃதெவ்வாற்றானும் அறாதாகலினும் அது பொருந்தாதென்க.
இதனை ஆசிரியர் கூறிய “பற்றாத போதும் பதறும்” – என்னுந் திருவெண்பாவாற் காண்கவென்க.
+ ஒழவிலொடுக்கம் 3 யோகக்கழற்றி :- 15-வது திருவெண்பா
“பற்றாத போதும் பதறும் பழக்கமதைக்
கற்றாலென் னாகக் கலக்காது – சற்றே நீ
தீண்டிவிடிற் றான்காண் செனன மரண மது
மாண்டுவிடி னீசிவமா வை. ”