திருஞானசம்பந்தப் பிள்ளையாருக்குச் சிறப்பிற் சிறப்பாய காரணப்பெயராய் நின்று, – ஓதியுணர்ந்து பன்னாட் பல சாதனங்களின் முயன்று முயன்று, ஆசாரியத்தன்மை யொருவாறு அரிதிற் கிடைப்பப்பெற்றும், ஓரோர் காலங்களின் அவத்தை வயப்பட்டு, மயங்கு மற்றையாசாரியர் போலாது ஓதாமல் வேதாகமாதிகளை முற்று முணர்ந்திறைப்போது மோர் சாதனங்களின் முயன்றதின்றி, ஞானாசாரிய வருளிலக்கணங்களனைத்துந் தாமே தம்பால் நிரம்பிநிற்ப, அமர்ந்தனரென்பதூஉம், ஓதியுணர்ந்த அவ்வாசாரியர்க்கெல்லாம் அவரவரறிவின் கண் அருளுருவாய் நின்றறிவித்தும் ஆசாரியவுருவாய் வெளி நின்று அனுக்கிரகித்தும் நின்றனரென்பதூஉம், — திருநோக்கஞ்செய்தன் முதலிய அறுவகை தீக்கையானுமன்றித் தமது திருவுருவைக் காண்டல் நினைத்தன் மாத்திரையே பக்குவரல்லாரும் பக்குவராய்ப்பயன்பெற நின்ற திருவருட் பெருமையரென்பதூஉங் குறித்ததென்றுணர்க.
இங்ஙனம் ஓதாமல் வேதாகமாதி யுணர்ந்தமை முதலியவற்றை யாசிரியர் கூறிய ” தன்மையும் முன்னிலையும் ” * என்னுந் திருவெண்பாவாற் காண்க.
அல்லதூஉம், குருராயன் என்பது, வாதுவென்ற சம்பந்தன் என்பதற்கு மேனிற்கவைத்த விதப்புக்குறிப்பாற் பிள்ளையார், இவ்வவதாரத்தின் மேனின்ற அவதாரத்தினுங் குமார சற்குருவாய் அரனார்க்கும் அகத்தியனார்க்கும் உபதேசித்தருளிய ஆசாரியத்தலைமையுங் குறித்த தெனக்கொள்க.
”தென்னவ னங்கனஞ் சூழ்காத் திரிநக சூலகரத்
தென்னவ னங்கனந் தப்பத நீட்டினன் செல்வமுன் பின்
றென்னவ னங்கநன் னீற்றற் றிருத்திய தென்னவின்னந்
தென்னவ னங்கனங் கைச்சிலைக் கூனையுந் தீர்த்தருளே.”
அருணகிரி நாதர், கந்தரந்தாதி, 56. என்றதனாற், பிள்ளையார் இவ்வவதாரத்திற்கு மேனின்ற அவதாரத்திற் குமாரசற்குரு வென்பது காண்க.
* 1. பொதுவிலுபதேசம் : பாட்டு –42.
“தன்மையு முன்னிலையுந் தானாய்ப் படர்க்கையுமாய்
என்னொழிவி லின்புமா யின்புமிது – என்னாத
வேதாந்த சித்தாந்த மேபிறவா வீடென்றான்
ஓதாமல் வேதமுணர்ந் தோன். ”
“உழன்மதிற் சுட்ட தனழகைப் பெருமான்
வணங்கிநின் றேத்தக் குருமொழி வைத்தோய்
குறுமுனி தேற நெடுமறை விரித்தோய் ” – கல்லாடம், பாயிரம் 2.
“அருமறையா கமமங்க மருங்கலை நூ றெரிந்த
வகத்தியனுக் கோத்துரைக்கு மருட்குருவாங் குருளை”- சித்தியார் என்பவைகளால் அரனார்க்கும் அகத்தியனார்க்கும் உபதேசித்த ஆசாரியத் தலைமையையுணர்க.
ஆயின், குருவேந்தன் என்னாது குருராயன் என்றது எது குறித்தற்கோ வெனின்:- நான்கன் வேற்றுமையானடுத்து மிக்குயர் நெறிப் பொருண்மையின் வந்த காரகச் சிறப் பொருதலைத் தொடர் மொழிப் பெயராய இக்குருராய னென்பதன்கட் குருவென்பதன், முதனிலை யெழுத்துத்தமிழியல் விதிப்படி மொழிக்கு முதலாகியும், ராயனென் பதன் முதனிலை யெழுத்துத்தமிழியல் விதியின்றி ஆரியவியல் விதிப்படி மொழிக்கு முதலாகியும், வந்து இருவகையியலுங் கோடலின், இதனைத் தம்பெயராகவுடைய பிள்ளையாருந் தமிழ்நூல் – வடநூலென்னும் இருவகை நூற்குமுரியாரென்பது குறித்தற்கென்க.
ஆசிரியர் ”மறைப்புலவன் தமிழ்க்குறிசில் சீகாழிச்சம்பந்தன் ” + என்றதனால் இருவகை நூற்கு முரியாரென்பது காண்கவென்க.
அல்லதூஉம், பொருள் வேறுபடாது, சிறிதே வடிவுவேறுபட்டு நின்ற குருராயனென்பது தன்னையுள்ளூன்றி நோக்கினர்க்கு இலைமறை காய்போல் ஜா வென்னு முயிர்மெய்யோடிருந்த தன் முன் வடிவமுட்கொண்டு விளங்கக் காட்டி நிற்கின்றதாகலின், இதனையுடைய பிள்ளையாருந் தமது கடவுட்டன்மை வேறு படாது உத்தமபுருட வுருவங்கொண்டு நின்ற தம்மை, அன்பான் உள்ளூன்றி நோக்கினார்க்குக் குமாரசற்குரு வென்னும் பெயர் கொண்டு, அளவிகந்த சூரியர் உதயம்போன் றொளிவீசுந்தம் முன்னுருவாய தெய்வத்திருவுரு வுட்கொண்டு, விளங்கக்காட்டி, நின்றனரென்று குறித்தற் கென்பதுமா மென்க.
+. பொதுவிலுபதேசம் : பாட்டு-11.
“சத்திய நிர் வாணத்தாற் றற்போதத் தாக்கறுத்து
வைத்து வழிகாட்டு மறைப்புலவன் – சுத்தன்
தமிழ்க்குரிசிற் சீகாழிச் சம்பந்த னென்பான்
எமக்கருளிச் செய்த திது. ”
“மறையவர் திருவே வைதிக நிலையே வளர்ஞானப்
பொறையணி முகிலே புகலியர் புகலே பொரு பொன்னித்
துறைபெறு மணியே சுருதியி னொளியே வெளியேவந்
திறையவ னுமையா ளுடனரு டரவெய் தினையென்பார். ”
ஆளுடைய பிள்ளையார் புராணம் 92 என்று, மூவாண்டிற் பிள்ளையார் திருவருள் வடிவைக்கண்டு சீகாழியுள்ளார், வியந்து கூறியவாறாய இச்செய்யுளால் உள்ளூன்றி நோக்கினர்க்குத் தம் முன்னுருவைக் காட்டி நின்றனரென்பது காண்க வென்க.
இனி இன்றியமையாக் காட்டுளதேற் காட்டுவதன்றி மற்றைய விரிக்கிற் பெருகும் என்க.
அல்லதூஉம், குரு என்பதன் ஈற்றுயிர்மெய்யோடு ராயன் என்பதின் முதலுயிர்மெய் புணராப்புணர்க்கையாய் நின்ற தாகலின், இங்ஙனம் ஆனந்த வடிவராகிய பிள்ளையாருந் தாங்கொண்டருளிய மானிடத்திருவுருவோடு புணராப் புணர்க்கையாய் நின்றனரெனக் குறித்தற்கென்பதுமாமென்க.
அல்லதூஉம், குறிலிணைக் கெதிர் நெடில் குறிலெண்ணீடாக நிற்பவும் ஈற்றின் அவ்வெண்ணீடின்றி யொற்று நிற்பவுந்தொடர்ந்த மொழியாகலிற் பிள்ளையாரும் பக்குவர்க்கு மறைப்பொருளாயும், அதிபக்குவர்க்கு அனுபவப் பொருளாயும் இவ்விரண்டினுங் கலவாது அதீதப்பொருளாயு நின்றனரென்று குறித்தற் கென்பதுமாமென்க.