ஒழுவிலொடுக்கம்

வள்ளல் – என்னும் பெயர் :–

ஆசிரியர்க்குத் தாம் முன்னிருந்த கிரியாசாரிய நிலைக்கண் அவ்வாசாரிய மரபின் வழித்தாய் வந்த காரண அபிடேகச் சிறப்புப்பெயரென்க.

அல்லதூஉம், பின்னர் ஞாநாசாரிய நிலைக்கண், தமதருண்ஞான நோக்கான் இயைந்த கண்ணுடைய வென்னுங்காரண விசேடண மேற்கொண்டு, நின்ற இவ்வள்ளலென்னும் பெயர், ஈண்டவ்விசேடணம் இசையெச்ச நிலையினிற்ப நின்றதெனினும் அமையுமென்க.

இஃது வினை பண்பு முதலியவடுத்த தொகை நிலைச்சொற்றொடராகாது, தொகாநிலையாய்த் தனைத்தொடர் பயனிலை அண்மைப் பொருளுணர்ச்சி யின்றி இடையிட்டு நிற்கத்தான் செய்யுண்முதற்கண் தனித் திருந்தமையின் ஆற்றலின்றாலோவெனின், அற்றன்று:- கொடை மடங் குறித்த குணங்கா ரணமாக வந்த இவ்வள்ள லென்னும் பெயர் தன்னுறுப்புகளுட் கொடை குணம், புகழழகு வளமென்னு நல்வகைக்குறித்த பல்பொருட் பகுதியாய வண்மையென்னு முதலுறுப்பான் ஆசிரியர்க்குளவாய அக்கொடை முதலிய அருட்குணங்களைக் குறிப்பிற் புலப்பட விரித்தலிற் பொருளாற்றல் உண்டென்க.

அல்லதூஉம், இப்பெயர், உயர்பொருட்கிடனாய், உடனிலைக் கூட்டாய், ஒரு நெறியசைத்தாய், ஓரினந்தழுவிப் பல்வகைக் குறிப்பிற்படர்ந்து, முற்றியைபு வண்ணப் பெருஞ் சொல்லாக நிற்றலிற் சொல்லாற்றலும் உண்டென்க.

ஆயின், இவ்வாசிரியர் பெயர் இச்செய்யுளின் இடை கடைகளின் ஒன்றினிறுத்தாது, முதலடி முதற்சீர் எதுகைத் தொடைக்கணிறுத்ததிற் குறித்த தியாதோவெனின், ஒன்றிரண்டெனக்கொண்டு உறுமறையாகம நன்றிருமுடிபி னடு நிலை நடா அய்ப்புலம்பெறு தத்துவ நியதியிற்போந்து, உண்மலந்தெறு மறிஞர் வாழ்த்திப்பரவும் ஆசிரியர் சன்மார்க்க முதலிய மார்க்க நான்கனுட்டலைமையிற் றலைமையாய வுத்தம சன்மார்க்கத்தினரென்பது குறித்ததென்க.

இங்ஙனம் உத்தம சன்மார்க்கத்தினரென்பதை யாசிரியர் கூறிய இதுவென்றதெல்லாம் பொய் யென்றான் * 1 என்னுந் திருவெண்பாவாற் காண்க. இஃது தின்னும் விரிக்கிற் பெருகும்.

* 1. பொதுவிலுபதேசம்: பாட்டு – 44.

”இதுவென்ற தெல்லாம் பொய்யென்றா னென க்குப்
பொதுவன்றித் தங்குமிடம் போச்சு – அதுநாங்காண்
என்றா னதன்பே ரிரவைப் பகலாக்கும்
ஒன்றோ பரம சுக மோ. ”