ஒழுவிலொடுக்கம்

131. சும்மா திருக்கவைத்த சூத்திரமாஞ் சாத்திரத்தை

சும்மா திருக்கவைத்த சூத்திரமாஞ் சாத்திரத்தை
விம்மாக் கதறுவதும் வேலைகளுந் – தம்மறிவா
னீட்டிப் பிடித்திருக்கு நிட்டைகளு ஞானிகண்முன்
காட்டும் பரியாசகம்.

(இ-ள்.) சும்மா திருக்க வைத்த சூத்திரம் ஆம் சாத்திரத்தை விம்மா கதறுவதும் லேலைகளும் தம் அறிவால் நீட்டிப் பிடித்து இருக்கும் நிட்டைகளும் – தற்போதத்தை ஒழித்து ஆநந்த மௌனமாயிருக்க ஓதிவைத்த உபாயமாகிய சாத்திரங்களை விம்மி அழுது ஓதலும், நீராடல் ஆதி கிரியைகளைச் செய்தலும், தமது போதத்தால் ஓர் வடிவைத் தியானித்து உடலை நீட்டிப்பிடித்து ஆசனங் கட்டியிருக்கும் நிட்டைகளும் ஆகிய இவை எல்லாம்,

ஞானிகள் முன் காட்டும் பரியாசகம் – இவைகள் ஒன்றும் இன்றி மௌனாநந்தமாயிருக்கும் மெய்ஞ்ஞானிகளின் முன்னர்க் காட்டப்பட்ட பரியாசகமாம்.

(வி-ரை.) வேதாகமவழி கூறும் ஞானசாத்திரங்களெல்லாம் தற்போதத்தை ஒழித்துச் சிவமாயிருத்தற்கு உபாயங்கூறும் ஆகலின், “சும்மாதிருக்கவைத்த சூத்திரமாஞ் சாத்திரத்தை” என்றும் ஞானசாத்திரத்தின் அருத்தங்களை நாடிக்கலுழ்தலான், ”விம்மா” என்றும், அவ்வருத்தப்படி நில்லாமையான், “கதறுவதும்” என்றும், கிரியைகள் யாவும் அறிவன்று ஆகலின், உலகர் வேலையோடு இதுவும் ஓர் வேலை ஆகலினும், “வேலைகள் ” என்றும், தற்போதத்தால் கூடும் நிட்டை ஞான நிட்டை அன்மையான் , நீட்டிப் பிடித்திருக்கு நிட்டை என்றும், இவையெல்லாம் ஞானி கட்குப் பரியாசகமா யிருத்தலின் “பரியாசகம்” என்றுங் கூறினார்.

“தம்மறிவா னீட்டிப் பிடித்திருக்கும்” என்றமையான் அருளறிவால் நிட்டைகூடுதல் நிட்டை என்பதாயிற்று.

இத்திருவெண்பாவால் போதம் இறந்து நிற்பதே நிட்டை என்றும், போதத்தோடுங்கூடிச் செய்வது நிட்டை அன்றென்றும் அறிவித்தவாறு காண்க.