தொழிலிறுதி தானே சுகவுதய மென்றாற்
றொழிலுதயந்துக்கமெனச் சொல்லோந்- தொழில் செயினும்
வந்திப்போ கம்போல வுண்டுடுத்தன் மாத்திரமாய்ச்
சிந்திப்பாரைப் பேணிச் செய்.
(இ-ள்.) தொழில் இறுதி தானே சுக உதயம் என்றால் தொழில் உதயம் துக்கம் எனச்சொல்லோம்- இம்மையைக் குறித்துச் செய்யும் உழவாதி அறுவகைத் தொழில்களும், மறுமையைக் குறித்துச் செய்யும் சரியாதி தொழில்களும், வீட்டைக் குறித்துச் செய்யுங் கருவிகளை நியதிகளைதலாகிய தொழில்களும், அதற்கு மேல் ஞாதுரு ஞான ஞேயமாய் நிற்கும் போத அசைவுகளும் அற்ற இடந்தானே சிவாநந்தோதயம் என்று வேதாகமங்கள் கூறும் எனின், அணுவள வேனுந்தொழில் உதயமான இடத்துத் துன்பம் உண்டாம் என்று யாம் கூறுகிலோம், ஆண்டுத் துன்பம் உண்டென்பது தொழிலிறுதிதானே சுகவுதயம் என்ற மொழிதானே விளக்கலின் :
(ஆயின் நீரிங்ஙனங் கூறிய ஆற்றான் தொழில் சிறிதேனும் செய்யவேண்டாவோ எனின்,)
தொழில் செயினும் வந்திப் போகம் போல உண்டு உடுத்தல் மாத்திரம் ஆய்ச் சிந்திப்பாரைப் பேணிச் செய் –இன்றியமையாத சிற்சில தொழில்களை நீசெய்யினும் இனிமேலைக்கு வேண்டும் என்று ஒன்றையும் கருதாது, உண்டு உடுக்கும் வந்திப் போகம்போல் இம்மை மறுமைப் போகங்களில் ஒன்றையும் சிந்தியாது, காடிகூழேனும் கிடைத்ததை உண்டலும் கரித்துணி கந்தையேனும் கிடைத்ததை உடுத்தலும் ஆகிய இம்மாத்திரமே சிந்திக்கும் பெரியோரைப் பார்த்து அவரைப்போல நீயும் செய்தி.
(வி-ரை.) ஓர் தொழிலும் செய்யாது நிழற்கண் இருப்பது சுகம் என்றால் எழுந்து வெய்யலிற் சென்று தொழில் செய்தல் துன்பம் என்பது சொல்லவேண்டுவது இன்றாகலின், “தொழிலு தயந் துக்கமெனச்சொல்லோம்” என்றார்.
வந்தி சுகத்தைச் சுதர் இன்மையால் மேலைக்கு ஒன்றையும் குறியாதது போல், ஞானிகட்கு இகபரங்களெல்லாம் பொய்யாகலின், இனி வரும் ஒன்றினையும் குறியார் ஆகலினும், அவர் உண்டு உடுத்தல் மாத்திரமாயிருத்தலினும் இங்ஙனம் உவமை கூறினார்.
“சிந்திப்பாரைப்பேணிச் செய்” என்பது, நீ தொழில் செய்தி ஆயினும் ஞானிகள் நடையைப்பார்த்து அவர்செய்யும் தொழில் மாத்திரமே அன்றி அதிகஞ்செய்யற்க என்ப தெனக் கொள்க.
இத்திருவெண்பாவால் ஞானக்கிரியை மாத்திரம் மேலைப்பயன் குறியாது செய்க என்று அறிவித்தவாறு காண்க.