அறிவாலே பற்றியனுபவித்து விட்ட
கிறியால் வருமோ கெடுவீ – ரறிவாய்நீர்
ஆம்போ தறிவிப்பான் றானா யவையிரண்டும்
போம் போதும் வாராப் பொருள்.
(இ-ள்.) அறிவாலே பற்றி அனுபவித்து விட்ட கிறியால் வருமோ கெடுவீர் – தற்போத அறிவால் ஒன்றைப் பாவித்துப்பற்றி, இஃது இங்ஙனம் இருப்பது என்று அப்போதத்தால் அநுபவித்து அறிந்து, மீட்டும் அப்பாவனையை விடுத்த பொய்யினால் வருமோ கெடுவீர்காள்
அறிவாய் நீர் ஆம்போதும் அறிவிப்பான் தான் ஆய் அவை இரண்டும் போம்போதும் வாராப்பொருள்- கருவிகள் முப்பத்தாறையும் நீங்கி அவற்றின் முடிவில் நின்ற அறிவு யாம் என்று அவ்வறிவாய் நீராகும்போதும் உம்மையும் தன்னையும் அறிவிப்பான் தானாகி, அந்த அறியும் அறிவும் அறிவிக்கும் அறிவும் ஆகிய இவை இரண்டும் நீங்கியபோதும் வாராத சிவனாகிய மெய்ப்பொருள்,
(வி-ரை.) பாவனையில் தோன்றும் வடிவு மாயை, அவ்வடிவில் இதம் பிறத்தல் கருமம், அவ்வடிவை மெய்யாகக் கருதப்பண்ணுவது ஆணவம் ஆகலின், ‘கிறியால் வருமோ கெடுவீர்’ என்றார்.
அருளும் ஆன்மபோதமும் நீங்கியபோது ஆன்மா சிவமயமாயிருக்கும் ஆகலின், அவையிரண்டும் போம்போதும் வாராப்பொருள்” என்றார்.
இத்திருவெண்பாவால் அருளையும் போதத்தையும் கடந்துநின்ற சிவம் போதத்திற்கு அகப்படாதென்று அறிவித்தவாறு காண்க.