அழிப்பே யவனுக்கு மிச்சையது வானா
லிழப்பே யுனக்கிச்சை யென்னா – யிழப்பை
யறியா ததுகா ணறியாவஞ் ஞானங்
கிறிகேளுன் போதங் கெடல்.
(இ-ள்) – அழிப்பே அவனுக்கும் இச்சை அது ஆனால் இழப்பே உனக்கு இச்சை என்னாய் – உன்போதத்தை ஒழிப்பதே சிவனுக்கும் இச்சை, அவனது இச்சாசத்தித்தொழிலும் அதுவானால், அவனது இச்சைபோல் உன் போதத்தை ஒழிப்பதே உனக்கும் இச்சையாகக் கருதுவாய், (நீ வீடடைய விரும்பினை எனின்);
(ஆயின் நீர் இங்ஙனங் கூறியவாற்றால் அஞ்ஞானங் கெடுதல் வீடு அன்றென்பதும், போதங்கெடுதல் வீடு என்பதும் ஆயிற்று. இனி அஞ்ஞானமாவது யாது எனின்)
இழப்பை அறியாதது காண் அறியா அஞ்ஞானம் கிறி கேள் உன் போதம் கெடல்: அப்போத இழப்பை அறியாது கிரியையாதிகளை செய்தலே அறியாமையாகிய அஞ்ஞா னமென்று அறிதி. (ஆயின், அப்போத இழப்பை அறிதற்கு உபாயம் எங்ஙனம் எனின்), பொய்யனே! இனி உன்போதங் கெடுதற்கு உபாயம் சொல்லுதும் நீ கேட்டி.
(வி-ரை.) சிவன் பெத்த திசையில் உடலை ஒழித்து மாயையில் வைத்து இளைப்பாற்றுதல்போல், முத்தி திசையில் போதத்தை ஒழித்து ஆனந்தக்கடலில்வைத்து இளைப்பாற்றுவனாயினும், அவன் ஒழிக்கும் இச்சை போல் தன்னை இழக்கும் இச்சைவைத்த ஆன்ம போதத்தை ஒழிப்பன் அன்றி அப்போதத்தை ஒழிக்கும் இச்சையின்றிய ஆன்ம போதத்தை ஒழியானாகலின், “இழப்பே யுனக்கிச்சை யென்னாய்” என்றார்.
இத்திருவெண்பாவால் தற்போத நாசத்தை விரும்பினோர்க்கு மெய்ப்பொருள் கிடைக்குமென்று அறிவித்தவாறு காண்க.