ஒழுவிலொடுக்கம்

136. காணு மறிவுநீ காட்டறிவு நாமவற்றைக்

காணு மறிவுநீ காட்டறிவு நாமவற்றைக்
காணக் கழலுங் கழற்றியிலே – நாணி
நமைத்திரும்பிப் பாராதே நான்றானென் னாதே
யமிழ்த்துகரகம் போனிற் பாய்.

(இ-ள்.) காணும் அறிவு நீ காட்டும் அறிவு நாம் அவற்றைக் காணக் கழலும் கழற்றியிலே--கருவிகளை இது இது என்று காணும் அறிவு நீ, அவற்றை உனதுயிர்க்கு உயிராயிருந்து உனக்குக் காட்டும் அறிவு நாம், அக்கருவிகளினது குணங்களை நீ காணக் காண அவைகள் எல்லாம் உனக்கு அன்னியமாய் நீங்கும் நீக்கத்தில் அவற்றின் முடிவில் நின்ற உன்னைக் கண்ட பின்னர்,

நாணி நமைத் திரும்பிப் பாராதே நான் தான் என்னாதே அமிழ்த்து கரகம் போல் நிற்பாய் – யான் காணும் அறிவு ஆகலின், அக்கருவிகளை அறிந்து நீங்கவும் என்னை உள்ளபடி அறியவும் எனக்குச் சுதந்தரம் இன்று என்று நீ நாணி எனக்குக் காட்டும் அறிவு ஒன்று உளது என்று நம்மை எதிரிட்டுப் பாராதே; அங்ஙனம் காணுமறிவும் காட்டும் அறிவுமாய் இருந்தோம் ஆயினும், கண்ணொளியும் ஆதித்தன் ஒளியும் பிரிபடாதது போல் பிரிபடாதிருப்போம் ஆகலின், அஃதன்றி இங்ஙனம் பிரிபடாதிருந்த பரிபூரணத்தை நான் தானென்று கருதாதே; கடலில் அமிழ்த்திய கரகம் சலத்தை உள்ளே மொண்டு அக்கடலில் மறைந் தாற்போல், நீயும் அப் பரிபூரணத்துக்குள்ளே அமிழ்ந்தி நீ தோன்றாது அதனுள் மறைந்து நிற்பாய்,

(வி-ரை.) கருவிகளினது குணங்களை எதிரிட்டு அறியாதபோது அவைகள் ஆன்மாவிற்கு அன்னியமாய் நீங்கா ஆகலின், “காணக்கழலும்” என்றார்.

கருவிகளை எல்லாம் நீங்கி ஆன்மா அருள் வடிவாய போது அவ்வருட் பூரணமெல்லாம் தானாய்த் தோற்றும் ஆகலின், “நான்றா னென்னாதே” என்றார்.

இத்திருவெண்பாவால் கருவிகள் நீங்குதற்கு உபாயமும் அவற்றை நீக்கித் தன்னை அருளால் அறிந்து அருட் பூரணம் விளங்கிய போது போதம் சீவியாது அருளில் மறைந்து நிற்றற்கு உபாயமும் அறிவித்தவாறு காண்க.