மருந்து பிணியோடே மாண்டு புகைதீ
யெரிந்த விறகோ டிறக்கில் – விரிந்த
தொழின் மனத்தின் மட்டே நீ தோயுமதென்னாடி
நிழல் புதைத்தாற் போலெதிர்போய் நில் .
(இ-ள்.) மருந்து பிணியோடே மாண்டு புகை தீ எரிந்த விறகோடு இறக்கில்- பிணிமாண்டபோது அது நீங்கற்பொருட்டு உண்ட மருந்தும் அப்பிணியோடு மாண்டு போம் எனில், எரிந்த விறகு இறந்தால் அவ்விறகோடு புகையும் தீயும் இறக்கும் எனில், அவை போல், உன்போதம் இறந்தால் அப்போதத்தோடு கிரியை இறக்கும் என்றும், கிரியை இறந்தால் அதனோடு கருவியும் போதமும் இறக்குமென்றும் அறியாது உன் போதத்தால் கிரியை செய்யாநின்றனை;
விரிந்த தொழில் மனத்தின் மட்டே நீ தோயுமது என் நாடி நிழல் புதைத்தால் போல் எதிர்போய் நில் – நானாவாய் விரிந்த உனது கிரியைத்தொழில்கள் மனத்தினளவே அன்றி வேறு இன்று ஆகலின், கருவிகள் முப்பத்தாறையும் போதத்தையுங் கடந்து நின்ற சிவத்தைக் கிரியை ஏதுவாகக்கொண்டு அப்போதத்தால் நாடி அச்சிவத்தை அடையத் தொடங்கும் உன் கருத்து என்னை! நீ அக்கருவிகளை நியதிகளைந்து அவற்றின் முடிவில் நின்ற உன்னை அருளால் அறிந்து, பெரிய நிழலில் சிறிய நிழல் மறைந்தாற்போல் நீ அத்திருவருளில் மறைந்து எதிரீடெல்லாம் போய் நிற்றி; (இங்கனம் நிற்றி எனின், போதம் ஒழித்தற்கு உபாயமும் சிவத்தைப் பெறுதற்கு உபாயமும் இதுவேயாம்),
(வி-ரை.) போதம் தோன்றிய போது கிரியை தோன்றும், அப்போதம் சிவத்தில் இறந்தபோது அப்போதத்தோடும் கிரியை இறக்கும்.
ஆகலின் போதத்தைப் பிணியாகவும், கிரியையை மருந்தாகவும் வைத்துக்கூறினார்.
விறகு எவ்வளவு இருந்ததோ அவ்வளவும் புகையும் தீயும் இறவா, அவ்விறகு இறந்தபோது அதனோடு புகை யும் தீயும் இறக்கும். அதுபோல கிரியை எவ்வளவு இருந் ததோ அவ்வளவும் கருவிகளும் போதமும் இறவா, அக்கிரியை சிறிதும் தோன்றாது இறப்பின் அதனோடு இக்கருவிகளும் போதமும் இறக்கும் ஆகலின், “புகை தீ யெரிந்த விறகோடிறக்கில்” என்றார்.
கிரியை இறந்தபோது கருவிகளும் போதமும் இறக்குமென்றது எங்ஙனம் எனின், கிரியை இருந்தபோது போதம் வளர்வதே அன்றி இறவாது, அக்கிரியை இறந்தால் போதத்திற்கு அசைவின்றிக் கெடும். இப்போதம் கெடவே இதனைத் தொடர்ந்து நின்ற கருவிகளும் கெடும். ஆகலின், இங்ஙனமென்று அறிதி,
பெரிய நிழலில் சிறிய நிழல் புறம்போகாது அடங்கின் மறையும் அது போல் பூரணமாகிய சிவபோதத்தில் கிஞ்சிக்கியமாகிய ஆன்மபோதம் எதிரிட்டசையாது அடங்கின் அதில் மறையும் ஆகலின், “நிழல் புதைத்தாற்போல்” என்றார்.
நீங்கிநின்ற கருவிகளையும் அடைந்துநின்ற திருவருளையும் எதிரிடாது நிற்க வேண்டுமாகலின், “எதிர்போய் நில்” என்றார்.
இத்திருவெண்பாவால் போதம் அடக்குதற்குபாயம் கூறியவாறு காண்க.