வேட்டியுந் தாழ்வடமும் வெண்ணீறும் வெண்பல்லுங்
காட்டுவது ஞானக் களவுகாண் – தேட்டமற்றோன்
பூரணன் காண் சிற்றறிவன் பொய்ப்பாச மென்றறிந்தார்க்
கோர்வடிவும் வார்த்தையு முண் டோ.
(இ-ள்.) வேட்டியும் தாழ்வடமும் வெண்நீறும் வெண்பல்லும் காட்டுவது ஞானக்களவு – காவிவேட்டியும், உருத்திராக்கத் தாழ்வடமும், மெய்ம்முழுதும் பூசும் வெண்ணீறும் அடைக்காய் தின்னாத வெண்பல்லும் இவை முதலிய சிவவேடங்களை மெய்யிற் காட்டுவது ஞானத்திருட்டு;
தேட்டம் அற்றோன் பூரணன் சிற்றறிவன் பாசம் பொய் என்று அறிந்தார்க்கு ஓர் வடிவும் வார்த்தையும் உண்டோ – ஓர் பொருட்கண்ணும் விருப்பம் அற்றோனாகிய சிவன் பரிபூரணன், சீவன் சிற்றறிவன், பாசம் பொய் என்று அறிந்த ஞானிகட்கு ஓர் சமய வேடமும் சமயாபிமான வார்த்தையும் உளவோ? இல.
(வி-ரை) அகத்து ஞானம் இன்றிப் புறத்து வேடத்தானும் வசனத்தானும் ஞானிபோற் காட்டினமையால், ஞானக்களவு காண்” என்றார். அகத்து ஞானமும் புறத்து வேடமும் உள எனின், ஞானக்களவு அன்று என்றாயிற்று.
சிவம் அணுத்திரள் முதலிய பொருள்கட்கெல்லாம் உட்புறனாகிய பரிபூரண அறிவாகலின், அதற்கோர் சமயம் இல்லை. சிற்றறிவு பொய்யாகிய பாசத்தை விட்டுநீங்கி அப்பரிபூரண அறிவோடும் கலந்தபோது, அப்பரிபூரண அறிவாய் நிற்கும் அன்றி, அது இது என்னும் பகுப்பில்லை ஆகலின், “ஓர் வடிவும் வார்த்தையுமுண்டோ ” என்றார்.
காண் – அசை.
இத்திருவெண்பாவால் வேடத்தால் மிகவும் சிறப்புள்ளாராயினும், அகத்து ஞானம் இலர் எனிற் சிறப்பிலர் என்பதும், வேடம் யாதும் இலராயினும் அகத்து ஞானம் உள்ளார் சிறப்புளர் என்பதும் அறிவித்தவாறு காண்க.