கல்வியாய்ப் புத்தகமாய்க் காவிகடுக் குட்கட்டாய்ப்
பல்லின் வெளுப் பொத்த பசுமார்க்க – மெல்லை
கழன்ற தியானத்திற் கண்சிமிட்டு மாங்காண்
கழன்ற பெரு மாயைத் தொழில்.
(இ-ள்.) கல்வி ஆய்ப் புத்தகம் ஆய்க் காவி கடுக்குள் கட்டு ஆய்ப் பல்லின் வெளுப்பு ஒத்த பசுமார்க்கம் – தாம் கற்ற கல்விகளைப் பேசுவதாய்ப் புத்தகம் கையிற் கொள்வதாய்க் காவிவேட்டி உடுப்பதாய்த் திருமேனிக் கடுக்கன் காதிலே இடுவதாய்க் கண்டத்தில் கெவுடம் கட்டுவதாய்ப் பேச்சிற்கும் வேடத்திற்கும் ஏற்பப் பல் வெளுப்பும் ஒத்திருந்த பசுஞான நெறியினை உடையார்,
எல்லை கழன்ற தியானத்தில் கண்சிமிட்டும் ஆம் சுழன்ற பெருமாயைத் தொழில் – பிருதிவி முதல் நாதம் ஈறு என்று அளவு கூறப்பட்ட கருவிகள் முப்பத்தாறையும் கழன்ற சிவத்தியானத்தை உடையவரைப்போலக் கண் மேற் செருகி ஆசனங் கட்டிக்கொண்டு இருப்பர். இவர் இங்ஙனம் இருப்பதாம் கறங்குபோல் சுழலாநின்ற பெரிய மாயையினது தொழிலாவது.
(வி-ரை.) ஞானம் இன்றி வேடங் கொண்டோர் வேடதாரிகளோடு ஒப்பு ஆகலின், பசுமார்க்கம்” என்றார்.
அகத்துப்பரிபூரண ஞானம் இன்றிக் கண்சிமிட்டிப் பத்திந்திரியங்களையும் அப்போதடக்கி ஆசனங்கட்டி இருப்போர்க்கு, முன்னர் ஞானேந்திரியங்களால் அறிந்து, கன்மேந்திரியங்களால் தொழில் செய்யும் மனம், அப்பத்திந்திரியங்களும் அடங்கலின் அவற்றின் வாசனையோடு முன்னர் ஏறிய வாசனையோடும் உள்ளே சுழலும் அன்றி அடங்காது ஆகலின், “சுழன்ற பெருமாயைத்தொழில்” என்றார்.
காண் – அசை.
இத்திருவெண்பாவால் ஞானநிட்டையின்மையான் அவரது நிட்டையை மறுத்தவாறு காண்க.