ஒழுவிலொடுக்கம்

144. இன்பே யறிவுக் கிடம்புள்ளி னைந்தது போற்

இன்பே யறிவுக் கிடம்புள்ளி னைந்தது போற்
றுன்பே யணுப் பொருப்பாய்த் துக்கிக்கும் நன்குணத்தாற்
பேரின்புக் கிச்சை பிறந்ததினிக் கேளுனக்குப்
பேரின்பந் தேடிப் பெறாய்.

(இ-ள்.) இன்பே அறிவுக்கு இடம் – இந்தப்பேரின்பம் பரிபூரணம் ஆகலின், இவ்வின்பமே ஆன்மா இருத்தற்கு இடம் ,ஆனால் அவ்வின்பம் இங்ஙனம் இருக்கும் எனின், அதனை யான் இப்போது அடையவேண்டும், இனிப்பிறவித்துன்பஞ் சிறிதும் படமாட்டேன் என்ற மாணாக்கனை நோக்கி மேற்கூறுகின்றார்.

புள் இனைந்தது போல் துன்பே அணுப்பொருப்பு ஆய்த்துக்கிக்கும் நன்குணத்தால் உனக்குப் பேரின்புக்கு இச்சை பிறந்தது இனிக்கேள் பேரின்பம் தேடிப் பெறாய் – உரப்பு ஒலி சிறிது தோன்றினும் அதனைப் பேரொலியாகக் கண்டு அசுணப்புள் வருந்தியது போல், நீ இத்தேகாதி பிரபஞ்சங்களான் வரும் துன்பம் அணுவளவு ஆயினும் அதனைப் பொருப்பளவாகக் கண்டு துன்புறும் நற்குணத்தால் உனக்கு இப்போது பேரின்பத்தின் மேல் இச்சை சனித்தது ஆகலின், இனி அதனை அடைதற்கு உபாயம் சொல்லும் கேட்டி, அப்பேரின்பத்தை யாம் கூறிய உபாயப்படி தேடிப் பெறுதி.

(வி-ரை.) விடயசுகத்தைத் துன்பம் எனக்கூறினால்,இதனை அங்ஙனம் கண்டோர்க்குச் சொரூப சுகத்தின் மேல் இச்சை சனிக்கும் ஆகலின், “துன்பே யணுப் பொருப்பாய்த் துக்கிக்கு நன்குணத்தாற் பேரின்புக் கிச்சை பிறந்தது” என்றார்.

இத்திருவெண்பாவால் பேரின்பத்தை விரும்பிக் கேட்ட மாணாக்கனுக்கு விடை கூறியவாறு காண்க.