பேரின்ப முன்னைப் பிரியாதுன் னுண்மையது
வோரின்ப மாய்விடயத் தூடுதிப்பும் – பேரின்
பழிவிலே தோன்று மறிவு மயலா
மொழியு மிரண்டின்ப மும்.
(இ-ள்.) பேரின்பம் உன்னைப் பிரியாது உன் உண்மை அது – அந்தப் பேரின்பம் உன்னை விட்டு எக்காலமும் ஓர் அணுவளவேனும் பிரியாதிருப்பது, அவ்வின்பமே உனக்கு உரித்தாய மெய்ம்மையாய் உள்ளது, அங்ஙனம் என்னை விட்டு நீங்காது எனக்கு உரித்தாய் மெய்ம்மையாய் இருப்பது எனக்குத் தோன்றாது இருப்பானேன் எனின்,
ஓர் இன்பம் ஆய் விடயத் தூடு உதிப்பும் பேரின்பு அழிவிலே தோன்றும்- உன்னால் அறியப்பட்டு ஓரின்பமாய் வனிதையர் விடயத்தூடு தோன்றுவதும், யாம் கூறிய அந்தப்பேரின்பமும் எதிரீடு அற்ற இடத்துத்தோன்றும்;
அறிவும் அயல் ஆம் ஒழியும் இரண்டு இன்பமும்– ஆணறிவும் பெண்ணறிவும் எதிரிட்டபோது அவ்வறிவுகளும் அயலாம், (ஆண்குறியும் பெண் குறியும் எதிரிட்டபோது இக்குறிகளும் அயலாம், இவைகள் அயலாகவே இவ்விருவகைக் கூட்டுறவுகளால் வரும்) இரண்டின்பங்களும் அயலாய் ஒழியும்.
(வி-ரை.) ஆண்குறியும் பெண்குறியும் கலந்து எதிரிட்டழிந்தபோதும், ஆணறிவும் பெண்ணறிவும் கலந்து எதிரிட்டழிந்தபோதும், அவ்வின்பமும் இவ்வின்பமும் தோன்றலான், அழிவிலே தோன்றும் என்று இருமைக்கும் பொதுவாகக் கூறினார்.
குறிகளும் அறிவுகளும் எதிரிட்டபோது இன்பம் இன்மையால், “ஒழியுமிரண்டின்பமும்” என்றார்.
இருவகைக் குறிகளும் கலந்தபோது அவை இருந்தும் தோன்றாது அழிதலானும், ஆண்குறி பெண்குறிக்கு உள்ளீடாயிருத்தலானும், இன்பம் தோற்றலானும், அவற்றினது கூட்டுறவை இவற்றினது கூட்டுறவிற்கு உவமையாகக் கூறினார்.
“அறிவும் அயலா” மென்ற உம்மையால் ஆண்குறி பெண் குறிகளும், ”அழிவிலே தோன்று” மென்றமையான் அழியாது எதிரிட்டபோது என்பதும் வருவிக்கப்பட்டன.
விடயாநந்த மேலீட்டால் பரவசமாவதுபோல் சொரூபாநந்த மேலீட்டால் பரவசமாவதுங் கொள்க.
இத்திருவெண்பாவால் பேரின்பம் ஆன்மாவை விட்டு நீங்காது என்பதும், அதனைப் பெறுதற்கு உபாயமுங் கூறியவாறு காண்க.
விடயாநந்தம் அறிதல்போல் அவ்வானந்தமும் அறியக் கூடாதோ எனின், மேற்கூறுகின்றார்.