உடம்புள்ள மட்டும் விடய மொடுங்கா
வொடுங்குகிலோ கேவலமா மும்ப ரிடம்புட்
பறந்தாற் கலங்குமோ பாசத்தி னுண்மை
யறிந்தாற் சுடாத்தடைபோ லாம்.
(இ-ள்.) உடம்பு உள்ள மட்டும் விடயம் ஒடுங்கா ஒடுங்குகிலோ கேவலம் ஆம்- விடயங்கள் அநுபவித்தற்கு ஏதுவாய உடம்பிருக்கும் அளவும் அவ்விடயங்கள் ஒழியா உடம்போடு ஒற்றுமையாயிருந்த ஞானேந்திரியங்கள் ஐந்திற்கும் எதிரீடாய் விடயங்கள் தோன்றுந்தோறும் அவற்றை ஒழிப்பேன் எனின், அங்ஙனம் ஒழிக்கில் கருவிகள் எல்லாம் ஒழியும், அவை ஒழியிலோ கேவலம் வந்து அடுக்கும்; (ஆயின் அவற்றை ஒழிக்குமாறு எவ்வாறு எனின்)
உம்பர் இடம் புள் பறந்தால் கலங்குமோ பாசத்தின் உண்மை அறிந்தால் சுடாத்தடைபோல் ஆம் – ஆகாயத்தினிடமாய்ப் புள் பறந்தால் அவ்வாகாயம் அசையாதது போல் நீ இம்மாயா வடிவத்தை யான் அலன் என்று நீங்கி அருள் வடிவாய் இருத்தி எனின், அப்போது விடயங்கள் வந்து அடுப்பினும் நீ அசையாதிருப்பை; ஆயின், மாயா வடிவமாயிருந்தபோது வருத்திய விடயம் திருவருள் வடிவாயிருந்தால் வருத்தாதிருப்பது எங்ஙனம் எனின், அசுத்தம் துக்கம் அநித்தியம் அன்னியம் என்று பாசத்தின் உண்மையைத் திருவருளால் அறிந்தனையாயின், அக்கினிச்சூட்டைத் தடுக்கும் மந்திரம் போல், அவ்வறிவு கருவிச்சேட்டையைக் கெடுக்கும் ஆகலின், அக்கினியிருந்தும் சுடாதது போல் கருவிகளிருந்தும் முன்போல வாதியாதாகும்.
(வி-ரை.) தான் கருவிகட்கு அன்னியமாய்ப் பிரிந்து நின்று அருளால் அடக்காது, அக்கருவிகளோடுங் கூடி நின்று போதத்தால் அடக்கினமையால் கேவலமாம், அருள் வடிவாயிருந்தபோது கருவிகள் அசைவதே அன்றித்தான் அசையான் ஆகலின், “உம்பரிடம் புட்பறந் தாற் கலங்குமோ” என்றார்.
இத்திருவெண்பாவால் கருவிகளை உள்ளபடி அருளால் அறிந்து நீங்கி, அவ்வருளில் மறைந்து நின்றால் மீட்டும் அவைகள் வந்து வாதியாது என்று அறிவித்தவாறு காண்க.
விடயங்களை இந்திரியங்களால் அறிந்து அநுபவித்தற்கு ஏதுவாய இவ்வுடலை ஒழித்து இவ்வின்பத்தைப் பெறுவேன் எனின், மேற் கூறுகின்றார்.