உடலிருந்தென் போயென் னுருவருவ மூன்று
மடைவர் தொழிலு மனாதி – குடமுடைத்து
மண்ணென்ன வேண்டுமோ மாயா வயிந்துவத்து
முண்ணின்று பார்த்தியிப்போ தும்.
(இ-ள்.) உடல் இருந்து என் போய் என் உரு அருவம் மூன்றும் அடைவர் தொழிலும் அநாதி – இவ்வுடல் இருந்ததனால் அவ்வின்பம் வருதற்குத் தடை என்னை? இதுபோயதனால் அவ்வின்பம் வருமாறு என்னை? அவ்வின்பம் வருதற்குத் தடை இவ்வுடலால் யாதும் இன்று ; உருவமும் அருவமும் உருவருவமும் ஆகிய இம்மூன்று வடிவத்தினையும் உடைய ஸர்வஞ்ஞர் (அநாதியிலே ஆணவமலத்திற் கிடந்த உன்னைக் காருணியத்தால் எடுத்து மாயையில் தநுகரண புவன போகங்களைக் கொடுத்து, இருவினை ஒப்பு மலபரிபாகம் வருவித்து, வீடடைவிக்கும் பொருட்டுச் செய்யும்) பஞ்ச கிருத்தியங்களும் அநாதி, (ஆகலின், இக்காயத்தை ஒழிப்பலெனக் கருதற்க);
குடம் உடைத்து மண் என்ன வேண்டுமோ மாயா வயிந்தவத்தும் உள் நின்று பார்த்தி இப்போதும் – ஒருவருக்குக் கடத்தை மண்ணென்று அறிவிப்பதே அன்றி அக்கடத்தை உடைத்து மண்ணென்று அறிவிக்க வேண்டுமோ? அதுபோல், உனக்கு இவ்வுடம்பை மலமென்று அறிவிப்பதே அன்றி, இதனை அழித்து மலமென்று அறிவிக்க வேண்டுமோ? ஆகவின், இதனுள் இருந்தே இவ்வுடம்பையும் மற்றும் உள்ளனவாய கருவிகளையும் மாயாமலமென்றும் உனக்கன்னியமென்றும் கண்டு நீங்கி, வயிந்தவ மாயையாகிய சுத்ததத்துவத்தின் முடிவில் நின்று, உன்னை அருளால் கண்டு அவ்வருளில் அசைவற இருத்தி, இப்போதும் அவ்வாநந்தம் உதயமாம் ; (தேக முடிந்த அப்போதும் அவ்வாநந்த மயமே அவை.)
(வி-ரை.) பெத்த திசையில் பஞ்சகிருத்தியத்தால் பஞ்சாவத்தைகளையும் உண்டாக்கி நடத்தாநின்ற ஸர்வஞ்ஞர் இப்போது முத்தி திசையினும் உனக்குப் பஞ்சாவத்தைகளையும் நீக்கித் தமது திருவடியாநந்தத்தைக் கொடுப்பர், நீ உடலை ஒழிக்க வேண்டுவது ஏதுக்கு என்று அறிவித்தற்கு, “அடைவர் தொழிலு மநாதி” என்றார். இப்போதும்” என்றமையான், அப்போதும் என்பது வருவிக்கப்பட்டது.
இத்திருவெண்பாவால் அவ்வின்பம் பெறுதற்கு உடலொழித்தல் ஏதுவன்று, இவ்வுடலா திகளை எல்லாம் தனக்கு அன்னியமென்று அருளாற் கண்டு நீங்கி, அவ்வருளில் நிற்றல் ஏதுவென்று அறிவித்தவாறு காண்க.
வேதாந்த முத்தியோ சித்தாந்த முத்தியோ உண்மை என்ற மாணாக்கனை நோக்கி மேற்கூறுகின்றார்.