ஒழுவிலொடுக்கம்

151. என்னாணை யென்னாணை யென்னாணை யேகமிரண்

என்னாணை யென்னாணை யென்னாணை யேகமிரண்
டென்னாமற் சும்மா திருவென்று – சொன்னான்
றிருஞான சம்பந்தன் சீகாழி நாட
னருளாளன் ஞானவிநோ தன்.

(இ-ள்.) என் ஆணை என் ஆணை என் ஆணை ஏகம் இரண்டு என்னாமல் சும்மாதிரு என்று சொன்னான் – முக்காலும் தமது பேரில் திருவாணைக்கூறி முத்தியில் வேதாந்தியைப் போல் ஏகம் என்றும், பேதசித்தாந்த வாதியைப்போல் இரண்டென்றும் கூறாது, இங்ஙனம் கூறுதற்கு ஏதுவாய உன் போதத்தை ஒழித்து, நீ மௌனாநந்தமாயிருத்தி என்று அருளிச்செய்தார்.

திருஞான சம்பந்தன் சீகாழி நாடன் அருளாளன் ஞான விநோதன்-திருஞான சம்பந்தப் பிள்ளையாரென்னுந் திருநாமத்தையுடையார், சீகாழிநாட்டிற்கு அதிபதியான அருளாட்சி யுடையார், ஞானத் திருவிளையாட்டினையுடையார்

(வி-ரை.) ஒன்றெனில் பெறுவானும் பேறும் இன்றாமாகலினும், இரண்டெனில் பதமுத்தியே அன்றி ஐக்கிய முத்தி கூடாதாகலினும், போத அறிவில் இரண்டாயும் போத ஒழிவில் ஒன்றாயும் இருத்தலினும், “ஏகமிரண்டெ ன்னாமற் சும்மா திருவென்று சொன்னான் ” என்றார்.

இத் திருவெண்பாவால் முத்தி நிச்சயம் ஈதென்று அறிவித்தவாறு காண்க.

ஐந்தாம் அதிகாரம் சரிதைக்கழற்றி முற்றிற்று.