கயிற்றரவுங் கட்டையினிற் கள்ளனும் போன் மாயா
மயக்கமற்ற வேதாந்த வாழ்வு – முயற்சி கெட்ட
வானந்தா தீதத்தே யாணவரா மாகமமுந்
தானந்தி னார்க்குச் சமன்.
(இ-ள்.) கயிற்றரவுங் கட்டையினில் கள்ளனும் போல் மாயா மயக்கம் அற்ற வேதாந்த வாழ்வும் – உள்ள கயிற்றினிடத்து இல்லாத பாம்பு கற்பிதமாகத் தோற்றுதல் போலும், உள்ள கட்டையினிடத்து இல்லாத கள்வன் கற்பிதமாகத் தோற்றுதல் போலும், உள்ள பிரமத்தினிடத்து இல்லாத மாயை கற்பிதமாகத் தோன்றுகிறதென்று அறிந்து, இம் மாயாமயக்கம் சிறிதுந்தோன்றாது இறந்த இடம் வீடென்று கூறும் வேதாந்தச் செல்வமும்,
முயற்சி கெட்ட ஆனந்தாதீதத்தே ஆணவர் ஆம் ஆகமமும் தான் நந்தினார்க்குச் சமன் – தற்போத முயற்சி சிறிதும் தோன்றாது இறந்த ஆநந்தாதீதத்தில் பெத்ததிசையில் ஆணவராகி இருப்பாரைப்போலும் இருப்பதே வீடென்று கூறும் ஆகமச்செல்வமும், தானென்று எதிரிட்டெழும் புல்லறிவு கெட்டார்க்குச் சமனாம்.
(வி-ரை.) அவித்தியாகதமாய் இருந்த சீவனது புன்மை அறிவாய் இருந்து நான் என்று எதிரிடும் அவ்வறிவு கெட்டபோது அச்சீவசாட்சியாய் இருந்த பிரமம் தான் ஆகலானும், ஆணவமயமாய் இருந்த ஆன்மாவினது புன்மை அறிவாய் இருந்து நான் என்று எதிரிடும் அப்போதம் கெட்டபோது அவ்வான்மா தனக்கு முதலாகிய சிவமயம் ஆதலானும், இங்ஙனம் ஆயபோது இருவர்க்கும் ஆநந்தாநுபவம் இருத்தலானும், “தானந்தினார்க்குச்சமன்” என்றார். தான் நந்தாத அபரஞானிகட்குச் சமன் அன்றென்பது தானே ஆயிற்று. இத்திருவெண்பாவால் வேதாந்த சித்தாந்த முத்தி இரண்டும் தற்போதம் ஒழிந்தோர்க்குச் சமனென்று அறிவித்தவாறு காண்க.