சிற்றறிவனாய்மறைப்பைச் சேர்ந்தவடிவொண்படிகம்
பற்றுகினு மொன்றாகாப் பான்மைபோ – லுற்ற
வுருவ சொரூப சுபாவ முனக்கு
வருமடைவு சொன்னோமதி.
(இ-ள்.) சிற்றறிவன் ஆய் மறைப்பைச் சேர்ந்தவடிவு ஒண்படிகம் பற்றுகினும் ஒன்று ஆகாப் பான்மைபோல்- கிஞ்சிக்கிய அறிவனாய்ச் செம்பில் களிம்பு போன்ற ஆணவ மறைப்பைச் சேர்ந்த வடிவு ஆன்மாவினது சுபாவம்; படிகம் அடுத்த வன்னமயமாயிருப்பினும் தன் நிறம் அந்நிறத் தோடு ஒன்றாகாத முறைமைபோல, தான் அடுத்த கருவி மயமா யிருப்பினும் தன் அறிவு அக்கருவி அறிவோடு ஒன்றாகாதிருப்பது ஆன்மாவினது உருவம், ஒன்றையும் பற்றா திருந்த படிகம் நிருமலமா யிருத்தல் போல, ஆன்மா மும்மலங்களையும் நீங்கி நிற்றல் அதனது சொரூபம்
உற்ற உருவ சொரூப சுபாவம் உனக்கு வரும் அடைவு சொன்னோம் மதி- இங்ஙனம் உனக்கு உற்ற சுபாவ உருவ சொரூபங்கள் வரும் முறையைச் சொன்னோம், இவற்றை அறிந்து கொள்ளுதி.
(வி-ரை.) “படிகம் பற்றுகினு மொன்றாகா” எனவே ஒன்றையும் பற்றாத படிகம் நிருமலமா யிருக்குமென்பது ஆயிற்று.
ஆணவம் சகசமலம் ஆகலின், அதனைச் சேர்ந்த வடிவு சுபாவம் என்றும்; படிகத்திற்குச் சிவப்புவன்ன முதலிய செயற்கையாய் வந்தது போல், ஆன்மாவிற்குக் கருவிகள் செயற்கையாய் வந்து பொருந்துதலின், இதனை உருவம் என்றும்; படிகம் வன்னங்களை நீங்கிய போது தனது சுயசொரூபத்தோடு இருத்தல் போல், ஆன்மா கருவிகளையெல்லாம் நீங்கியபோது தனது சுய சொரூபத்தோடு இருத்தலின், இதனைச் சொரூபம் என்றுங் கூறினார்.
இத்திருவெண்பாவால் ஆன்மாவினது உருவசொரூப சுபாவம் அறிவித்தவாறு காண்க.