ஒழுவிலொடுக்கம்

158. நினைப்பு மறப்பற்று நிறைந்த வறிவா

நினைப்பு மறப்பற்று நிறைந்த வறிவா
யனைத்துடனு நின்றம் பரமாய்த் – தனக்கருளித்
தன்னாந் தத்தைத் தனக்களித்த சர்க்கரையே
யன்னானுக் கின்னவைமூன் றாம்.

(இ-ள்.) நினைப்பு மறப்பு அற்று நிறைந்த அறிவு ஆய் அனைத்துடனும் நின்று அம்பரம் ஆய்த் தனக்கு அருளி- நினைப்பு மறப்பாகிய சகலகேவலங்களை அநாதியிலே நீங்கி, எங்கும் பரிபூரண அறிவாய், எல்லாவற்றோடும் கூடிநின்றும், ஆகாயம் போல் ஒன்றோடும் தாக்கற்றிருப்பதாய், ஆன்மாவிற்கு அருள் செய்து மும்மலங்களையும் நீக்கி,

தன் ஆநந்தத்தை தனக்கு அளித்த சர்க்கரையே அன்னானுக்கு இன்னவை மூன்று ஆம்- தனது பேராநந்தத்தை அவ்வான்மாத்தனக்குக் கொடுத்தருளிச் செய்த நாவிற்குச் சர்க்கரையே அன்ன சிவனுக்கும் இன்ன உருவ சொரூப சுபாவம் மூன்றும் உண்டாம்.

(வி-ரை.) “நினைப்பு மறப்பற்று நிறைந்த வறிவாய்” எனவே சிவனது சுபாவம் அநாதியிலே நின்மலமாயிருத்தல் எனவும், “அனைத்துடனு நின்றம் பரமாய்” எனவே இங்ஙனம் இருப்பது அருளாகலின், அவனது உருவம் இச்சாஞானக் கிரியைகள் எனவும், “தன்னாந்தத்தைத் தனக்களித்த” எனவே ஆநந்தம் அவனது சொரூபம் எனவுங் காண்க.

இத்திருவெண்பாவால் சிவனது உருவ சொரூப சுபாவம் அறிவித்தவாறு காண்க.