ஒழுவிலொடுக்கம்

163. பொய்யென்ற வார்த்தை புரையற்று மெய்யானால்

பொய்யென்ற வார்த்தை புரையற்று மெய்யானால்
மெய்யென்பது தேட வேண்டுமோ – மையிருளைத்
தீர்த்த வெயிலைத் திரும்பி யசைத்திமைத்துப்
பார்த்ததிலென் சந்தையம்வைப் பாய்.

(இ-ள்.) பொய் என்ற வார்த்தை புரை அற்று மெய் ஆனால் மெய் என்பது தேடவேண்டுமோ – கருவிகள் எல்லாம் பொய் என்று சொன்ன வார்த்தை போல், குற்றமற்று, உனது அறிவிற்கு அவை பொய் என்பது உண்மையாய்த் தோற்றும் எனின், மெய்யாகிய ஞானம் என்பது வேறு தேடவேண்டுமோ? அவத்தையைப் பொய்யாய்த் தோற்றுவித்தது தானே ஞானம் அன்றோ? ஆயின், இங்ஙனந் தோற்றுவித்த ஞானத்தை யான் கண்டுகொண் டிருக்க வேண்டாவோ எனின்

மை இருளைத் தீர்த்த வெயிலைத் திரும்பி அசைத்து இமைத்துப் பார்த்து அதில் என் சந்தையம் வைப்பாய்- மயக்கமாகிய ஆணவ இருளைத் தீர்த்த ஞானப்பிரகாசத்தை உன் போதத்தால் எதிரிட்டு அசைத்துப் பார்த்தும் அங்ஙனம் பாராது ஒழிந்தும், அந்த ஞானப்பிரகாசத்தை ஈது அஃதாமோ அன்றோ என்று நீ என்னை ஐயுறுகின்றாய் (அங்ஙனம் ஐயுறாது அதனுள் அசைவற நிற்றி).

(வி-ரை) சூரியப் பிரகாசத்தால் இருள் நீங்கி, அப்பிரகாசத்தைக் கண்ட கண் ஈது அப் பிரகாசமோ அன்றோ என்று அதன் மேல் ஐயுறாது, அவ்வொளியில் ஏகீபாவமாய் நிற்பது போல், அருளில் அசைவற நிற்க வேண்டும் ஆகலின், அங்ஙனம் உவமை கூறினார்.

இத்திருவெண்பாவால் கருவிகள் அனைத்தும் பொய்யாக உள்ளபடி அறிதலே ஞானம் என்று அறிவித்தவாறு காண்க.

தேகாதி பிரபஞ்சமெல்லாம் பொய் என்றும், பிறவித்துன்பம் ஈது ஆகாதென்றும், ஞானிகளும் ஞானிகள் அல்லாரும் கூறுகின்றார். இவருள் ஞானிகளை அறிவது எங்ஙனம் எனின், மேற்கூறுகின்றார்.