வேண்டா பிறப்பென்ற வார்த்தையினின் மெய்விடயந்
தீண்டா ததிலே தெரியாதோ – காண்பீ
ருடம்பு மிகையொன்றி லாமையே நோன்பென்
றடங்க வடங்கினாரை.
(இ-ள்.) வேண்டா பிறப்பு என்ற வார்த்தையினில் – பிரபஞ்சம் பொய் என்றும், பிறவி ஆகாது என்றும், மெய்ஞ்ஞானிகளும் பொய்ஞ்ஞானிகளும் கூறிய வார்த்தையினால், (அவர்களைப் பிரித்துக் காணக்கூடாதாயினும்),
உடம்பு மிகை ஒன்று இலாமையே நோன்பு என்று அடங்க அடங்கினாரை மெய்விடயந் தீண்டாது அதிலே தெரியாதோ காண்பீர்-உடம்பைச் சத்துரு என்றும், ஓர் விடயங்களினும் பற்று இலாமையே நோன்பு என்றும் அறிந்து அத்தேகபோகங்களை யான் எனது என்று கருதும் புறத்து நின்ற போதம் அடங்க , உள் நின்ற போதம் அடங்கிய மெய்ஞ்ஞானிகளை அவரது உடம்பு விடயங்களைப் பற்றாது அதனால் தெரியும் ஆகலின், இக்குறிப்பால் கண்டு கொள்வீர்.
(வி-ரை.) மெய்யால் காண்பீர் என்றமையால், வார்த்தையிலே காணக்கூடாது ஆயினும் என்பது வருவிக்கப்பட்டது.
மெய்யோடு இந்திரியங்கள் ஒற்றுமையாயிருத்தலின் “மெய் விடயந் தீண்டா ” தென்று ஆகுபெயராகக்கூறினார்.
என்று என்பதனை “உடம்புமிகை” என்றதனோடுங் கூட்டுக.
இத்திருவெண்பாவால் வாசக ஞானிகளையும் அநுபவஞானிகளையும் அறிதற்கு ஏது கூறியவாறு காண்க.
ஆறாம் அதிகாரம் விரத்தி விளக்கம் முற்றிற்று.