பட்டினத்துப் பிள்ளையினைப் பத்ரகிரி யைப்பரவி
விட்டுவிட மாட்டார் வெறுவீடர் – வெட்ட
வெறுவெலும்பை நாய்கறண்ட வேந்தர்வரநாய்பார்த்
துறுமுவதைக் காட்டுவோ மோ.
(இ-ள்.) பட்டினத்துப் பிள்ளையினைப் பத்ரகிரியைப் பரவி விட்டு விடமாட்டார் வெறுவீடர் – அளவற்ற செல்வராயிருந்தும் அச்செல்வங்கள் எல்லாம் துரிசறத் துறந்த பட்டினத்துப்பிள்ளை நாயனாரையும், பத்திரகிரி நாயனாரையும் தோத்திரம்பண்ணி, மனைவியாதிய பற்றுக்களை விட்டுத் துறக்க மாட்டார்கள் மிகுந்த மிடியராயிருந்தார்; ஆயினும் மனைவி மக்கள் முதலாயினோரை யாம் விடுத்துத் துறந்தோமேல் அவரை அயலார் கைக்கொண்டு போகாரோ எனின்
வெட்ட வெறு எலும்பை நாய் கறண்ட வேந்தர் வர நாய் பார்த்து உறுமுவதைக் காட்டுவோமோ –ஊன் சிரிதும் இன்றிய வெள்ளெலும்பை ஓர் நாய் தனது பற்கொடு கறண்ட, அந்நாய் முன்னர் அரையர் எதிர்வர, அவ்வெலும்பை அவர் கவர்ந்து கொள்வர் என்று கருதி அவரைப் பார்த்து உறுமுவதைப்போல், யாமும் காட்டுவோமோ?
(வி-ரை.) அளகேசனைப் போன்ற செல்வத்தினையும், அருந்ததி போன்ற கற்பினையுடைய மனைவியையும், காமனைப்போலும் கட்டழகினையும் துறந்தோர் பட்டினத்துப் பிள்ளை நாயனாரும், பத்திரகிரி நாயனாரும் ஆகலின், அவரைத் துறந்தோர் என்று எடுத்துக்காட்டி, அம்மூவகையுள் ஒன்றேனும் இல்லாரும் அவரைப்போல் துறக்க மாட்டாமையால், “விட்டுவிட மாட்டார் வெறுவீடர்” என்றார்.
எலும்பு கறண்டும் நாய்க்குத் தனது எயிற்றில் அது தைத்த துன்பந் தெரியாது இன்பமாத் தோற்றல்போல் வனிதாதி போகங்களாகிய துன்பத்தை, ஆணவம் இன்பம் போல் மாறுபடுத்திக் காட்ட இன்பமாகக் கருதலான் “வெறுவெலும்பை நாய்கறண்ட” என்றார்.
தான் பற்றிய எலும்பை அரையர் கவர்வரெனக் கருதி, அவரைப்பார்த்து உறுமுவது போல், தாம் பற்றிய குடும்பத்தைப் பிறர் கவர்வரெனக் கருதிக் கூறலான்; “உறுமுவதைக் காட்டுவோமோ” என்றார்.
இத்திருவெண்பாவால் செல்வம் இளமை அழகு முதலானவற்றுள் சிறந்திருந்தும், அவற்றில் பற்று ஓரணுவளவும் இன்றி, அவற்றையெல்லாம் துன்பமென்று துரிசறக் கைவிட்ட பட்டினத்துப்பிள்ளை நாயனார் பத்திரகிரிநாயனார் போன்று துறந்தோரே எல்லாவற்றையும் துறந்தோராவர் என்பதும், அச்செல்வம் முதலியவற்றுள் ஒன்றேனும் இன்றாகவும், துன்பம் தருதற்கு இடமாகிய மனைவியாதி குடும்பத்தை இன்பமெனக் கருதிக்கைவிடற்கு அஞ்சுபவரே ஆணவத்தால் மறைப்புண்டவராவர் என்பதும் அறிவித்தவாறு காண்க.
நீர் இங்ஙனங் கூறியவாறே துறந்தோர் பிறப்பு நீங்குவரோ எனின், மேற்கூறுகின்றார்.