நாடுநகர் வீடுடையா டாய் தந்தை நட்பு மக்கண்
மாடுகுலம் பொன்னுடம்பின் வாதனைகள் – கூடத்
தொடுத்தவலைக் கண்ணித் துடக்கிதனை யிப்போ
விடப்பெறுவா ரேன் பிறப்பார் மேல்.
(இ-ள்.) நாடு நகர் வீடு உடையாள் தாய் தந்தை நட்பு மக்கள் மாடு குலம் பொன் உடம்பின் வாதனைகள் – நாடும் நகரும் வீடும் மனைவியும் தாயும் தந்தையும் நட்பும் மக்களும் மாடும் சாதியும் திரவியமும் இவை முதலிய உடம்பு வாதனைகளும்
கூடத்தொடுத்த வலைக்கண்ணித்தொடக்கு இதனை இப்போவிடப்பெறுவார் மேல் என் பிறப்பார்- தாம் அகப்படப் பிணித்த வலையும் கண்ணியும் ஆகிய தொந்தனை என்றறிந்து, இத் தொந்தனையை இப்போது விடப் பெறுவார் இனிமேல் என் பிறப்பார்?
(வி-ரை.) உடம்பின் வாதனைகள் என்றமையால் ஆடை ஆபரணம் யானை குதிரை கவிகை சிவிகை சாமரை முதலியவும் கொள்க. இங்ஙனம் கூறிய எனதென்னும் போகப்பற்றை நீத்துத் தவஞ்செய்வோர்க்கு, யானென்னும் தேகப்பற்றும் அறும், இத்தேகப்பற்று அறவே இவற்றை யான் எனதென்று புறத்து நின்ற போதம் அறும், இப்போதம் அறவே உள் நின்ற போதம் அசுத்தவாசனை பண்ணாது சுத்த வாசனை பண்ணும், இவ்வாசனையால் ஞானம் கிடைக்கும், இஞ்ஞானத்தால் வீடுளதாம், ஆகலின், “ஏன் பிறப்பார்மேல்” என்றார்.
இத்திருவெண்பாவால் போக வாதனைகள் எல்லாம் பற்றறத் துறந்தோர் தேகவாதனையாதிகள் அற்று ஞானத்தால் வீடடைவது மெய்ம்மை ஆகலின், அவர்க்கு இனி என்றும் பிறப்பு இன்று என்பது அறிவித்தவாறு காண்க.
நீர் கூறிய மனை ஆதிய பற்றுக்களை எல்லாம் துறந்து பொன்னை மாத்திரம் பிடித்துக்கொண்டு தவஞ்செய்யலாகாதோ எனின், மேற்கூறுகின்றார்.