செல்வ மிளமை யுடம்பு பேய்த் தேரென்று
சொல்லுவதென் காணாரோ சுட்டது போ-யொல்லை
விடுவோர் பிறப்பிறப்பின் மீளார் கண் மீண்டாற்
றொடுமோ சிவனைத் தொடா.
(இ-ள்.) செல்லம் இளமை உடம்பு பேய்த்தேர் என்று சொல்லுவது என் காணாரோ- செல்வமும் இளமையும் உடம்பும் இவை முதலிய பிரபஞ்சங்களும் கானற்சலம் போலப் பொய்யென்று யாம் கூறவேண்டுவது என்னை! அவை மெய்போலத் தோன்றி அழிவனவற்றைத் தாம் காட்சிப் பிரமாணமாகக் காணார் கொல்லோ? (ஆயின், எல்லோரும் ஞானத்தால் பிறப்பு அறுமென்று கூற, நீர் துறவால் பிறப்பறும் என்று கூறியது என்னை எனின்),
சுட்டு அது போய் ஒல்லை விடுவோர் பிறப்பு இறப்பில் மீளார்கள் மீண்டால் தொடுமோ சிவனைத் தொடா-தேகாதி பிரபஞ்சங்களை யான் எனது என்று சுட்டி அறியும் இச் சுட்டுப் போதம் போய், அப்பிரபஞ்சத்தைச் சீக்கிரத்தில் விட்டுத் துறப்போர் பிறப்பிறப்பில் மீண்டு வாரார்கள், ஞானக் குறைவினால் மீண்டார்களேனும், (முன் துறந்து தவம்பண்ணிய வாசனையால் அப்பற்றுக்களைக் கடந்து நிற்பரே அன்றி, அவரைப் பற்றுத் தீண்டுமோ? தீண்டாது; ஆயினும், பிறப்பில் மீண்டோரைத் தீண்டாதோ எனின், அவர் சிவனைப்போலும் ஒன்றோடும் பற்றற்றுடையர் ஆகலின், தீண்டாது.
(வி-ரை.) அநித்திய விவேகந்தோன்றிய அக்கணமே தாழ்த்திராது எல்லாவற்றையும் விடவேண்டும் ஆகலின், “ஒல்லைவிடுவோர்” என்றார்.
முற்பிறப்பில் அவா உடையார்க்கு இப்பிறப்பினும் அது தொடர்தல் போல், முற்பிறப்பில் அவா அறுதி உடையார்க்கு இப்பிறப்பினும் அவ்அவா அறுதியே தோற்றும் ஆகலின், “சிவனைத் தொடா” என்றார்.
இத்திருவெண்பாவால் உடம்பு முதலிய பிரபஞ்சங்கள் தோன்றி அழிவது பிரத்தியக்மாக இருத்தலின், கானற் சலம்போன்று அழிவதென்று ஒருவர் கூறக் கேட்கவேண்டுவது இன்றென்பதும், இங்ஙனம் பிரத்தியக்கமாயிருப்பினும் அறியார் அஞ்ஞானிகள் என்பதும், சுட்டறிவுபோய்ப் பிரபஞ்சத்தை அநித்தியமென்று அறிந்து விரைந்து விட்டுத் துறப்பதே ஞானமென்பதும், இத்துறவுடையோர் ஈண்டு மீண்டும் பிறவார் என்பதும், தவக்குறைவால் மீண்டார் ஆயினும் ஒன்றினும் பற்றுதல் அற்றிருப்பர் என்பதும் அறி வித்தவாறு காண்க.
இந்த அவா அறுதியினால் வரப்பட்ட இன்பம் என்னை என்ற மாணாக்கனை நோக்கி, மேற்கூறுகின்றார்.