தின்னிற் றிமிரில் விடம்பிடித்துத் தீர்ந்துவிடும்
பொன்னை நினைக்கப் பொறாது காண் – பின்னை
மருந்தாலு மந்திரத்தி னாலுந் தவிராப்
பெரும்பாவம் பெண்ணிற் பெரிது.
(இ-ள்.) தின்னில் திமிரில் விடம் பிடித்துத் தீர்ந்து விடும் பொன்னை நினைக்கப் பொறாது காண் பின்னை மருந்தாலும் மந்திரத்தினாலுந் தவிராப் பெரும்பாவம்- கோபாதிகளாகிய திமிரினால் விடம் உண்டால், அவ்விடம் சிறிது போது தாழ்த்துத் தலைமீக்கொண்டு, பின்னர் மணிமந்திர ஔடதங்களால் தீர்ந்து போம், பொன்னைக்கரத்தானும் பற்றாது வாக்கானும் கூறாது மனத்தால் நினைக்கவே, அப்பொன்னாசையாகிய விடம் அரைக்கணமேனும் தாழாது, அந்நினைவினும் விரைந்து தலைமீக்கொண்டு, பின்னர் மணியானும் மருந்தானும் மந்திரத்தானும் தீராத பெரும்பாவம் ஆகலின்.
பெண்ணில் பெரிது – நீ விடுக்கின்றேன் என்ற பெண்ணாசை விடத்தைப் பற்ற இப்பொன்னாசை விடம் மிகவும் பெரிது; (இதனை மனத்தானும் நினையாது விடவேண்டும்).
(வி-ரை.) துறந்தோர் பொன் பிடித்தால் அதனைப் பாதுகாத்தற்கு இடம் பிடிக்கவேண்டும்; அஃதன்றி, அப்பொன்னை வளர்த்தற்கு அவாத்தோன்றி, அபக்குவர்க்கு ஞானசாத்திரங்களைக் கூறி, பொன் கொடுத்தார்மேல் விழைவும், கொடாதார்மேல் வெகுளியும் தோன்றும் இவை தோன்றவே துறவால் வரும் தவப்பயனும் இன்றி, முன் பெண்ணோடுங் கூடிச் செய்த இல்லறப்பயனும் இன்றிக் கேடுவரும்; ஆகலின், “பெரும்பாவம் பெண்ணிற் பெரிது” என்றார்.
காண் – அசை.
இத்திருவெண்பாவால் பொன் மனத்தால் நினைப்பினும் மாறாமயக்கம் தருதலானும், ஈட்டல் ஆதியான் விழைவுவெகுளியாதிகள் அடுத்துத் தவப்பயன் அன்றி இல்லறப்பயனும் அழிதலானும், பெண்ணாசையினும் பெரும்பாவம் தருவது ஆகலின், அதனைப் பற்றலாகாது என்பது அறிவித்தவாறு காண்க.
இங்ஙனந் தேகாதி பிரபஞ்சம் எல்லாம் பொய் என்று நீர் சொல்லக் கேட்டதே அன்றி மற்றியாவருஞ் சொல்லக் கேட்டிலேன் என்ற மாணாக்கனை நோக்கி, மேற்கூறுகின்றார்.