ஒழுவிலொடுக்கம்

179. நித்திரைசெய் வீட்டி னெருப்பும் பெரும்படையு

நித்திரைசெய் வீட்டி னெருப்பும் பெரும்படையு
முற்றிப் புறப்பட்டார் முற்றத்தே – பித்தரைப்போ
னில்லென்று சொன்னாலு நிற்பரோ வப்படிகா
ணில்லறத்தை நீத்தா ரியல்பு.

(இ-ள்.) நித்திரை செய் வீட்டில் நெருப்பும் பெரும் படையும் முற்றி முற்றத்தே புறப்பட்டார் நில் என்று சொன்னாலும் பித்தரைப்போல் நிற்பரோ – தாம் நித்திரை பண்ணா நின்ற வீட்டினுள்ளே நெருப்பும் பெரும்படையுஞ் செறிந்து வர விழித்து, அவற்றைக்கண்டு வெருண்டு அவ்வீட்டின் வாயில் கடந்து, முன்றிலில் புறப்பட்டார் தமக்கு அனுகூலராயினும், அவற்றின் நடு நிற்பீரென்று அறியாது கூறினும், பித்தரைப்போலும் அவர் மொழியை உட் கொண்டு கணப்போதாயினும் நிற்பரோ?

அப்படி காண் இல்லறத்தை நீத்தார் இயல்பு –அவர் எப்படி நில்லாது ஓடிச் செல்வரோ அப்படியே மாதாபிதாக்கள் வந்து தடுப்பினும் நில்லாது இல்வாழ்க்கையைத் துக்கமாகக் கண்டு துறந்து செல்வாரது முறைமையும் .

(வி-ரை.) குடும்பந் துக்கமென்று அறியாதபோது அதனோடுங் கூடியிருப்பார் என்பதும், துக்கமென்று அறிந்தபோது அதனைத் துறந்து செல்வார் என்பதும், துறந்து செல்லும் போது யாவர் தடுப்பினும் நில்லார் என்பதும், இவ்வுவமைக் குறிப்புகளாற் காண்க.

காண் – அசை.

இங்ஙனந் துறந்து செல்வோர் இயல்பு இன்னுங் கூறுகின்றார்.