கட்டு நெகிழ்த்து விட்ட கள்ளனைப்போற் கங்குலிற்பேய்
வெட்டு களத்தின் வெருவினர்போல் – முட்டத்
தொடர்ந்த படைபிழைத்துத் தோன்றப்போ வார்
போலடங்கத் துறந்தேகு வார்.
(இ-ள்.) கட்டு நெகிழ்த்துவிட்ட கள்ளனைப்போல் கங்குலில் பேய் வெட்டு களத்தின் வெருவினர்போல் முட்டத்தொடர்ந்த படை பிழைத்துத் தோன்றப்போவார் போல்- பொருள் திருடிய கள்வனைச் சிலர் வந்து பற்றிப் பிணித்து வருத்த அவருள் அருள் உளத்தொருவன் வந்து அப்பிணியை அவிழ்த்து விட்டகாலை விரைந்து செல்லும் அக்கள்வனைப்போலும், அரையிரவில் பெரும் பேயைக்கண்டு வெருவினர் விரைந்து சேறல்போலும், யுத்தகளத்தின் வெருவினர் விரைந்து சேறல்போலும், தம்மைப் பிடிக்கப் பின்தொடர்ந்த படைக்குத் தப்பி மிகவுங் கைகடந்து செல்வார் போலும்,
அடங்கத் துறந்து ஏகுவார் – தாய்தந்தை மனை சுற்றம் முதலிய குடும்பக் கூட்டங்களை எல்லாம் ஒருங்கே துறந்து செல்வார் அன்றி, அவர்க்கு ஓர் தடையும் இன்று.
(வி-ரை.) மலபரிபாகம் வாராமுன் தாம் செய்த இருவினைக்கீடாய்க் குடும்பபாசத்தால் பிணிப்புண்டு வருந்துவர் என்பதும், அப்பரிபாகம் வந்தகாலைத் தோன்றா நின்ற அருட்சத்தி அக்குடும்ப பாசந்துக்கமென்று அறிவிக்க அறிந்து துறந்து செல்வார் என்பதும், அப்போது இரவில் தோன்றும் பேய்போலும், யுத்தகளம்போலும், குடும்பம் அவர்க்குத் தோற்று மென்பதும்; அக் குடும்பக் குழாங்கள் பின் தொடர்வரென்று அறிந்து தூரதேசத்திற் செல்வாரென்பதும், இவ்வுவமைக் குறிப்புகளாற் காண்க.
படை – சேனை.
இவையிரண்டு திருவெண்பாவானும் குடும்பபாரம் பொறுத்தற்கு ஆற்றாது வருந்தி இழித்து விட்டு விரைந்து செல்வோர் தாய்தந்தையராதியர் தடுத்தற்குச் சிறிதும் உட்படாரென்று அறிவித்தவாறு காண்க.
தாம் துறந்து போதற்குக் குடும்பத்தார் சம்மதித்தால், அப்பதியிலிருந்து தவம்பண்ணலாகாதோ எனின், மேற் கூறுகின்றார்.