ஒழுவிலொடுக்கம்

182. துக்கஞ் சுகமான சுட்டறிவு கெட்டவர்க்குத்

துக்கஞ் சுகமான சுட்டறிவு கெட்டவர்க்குத்
திக்குண்டோ வெங்குஞ் சிவாலயமா – மக்கினிக்குப்
பிச்சை பொது நிழனீர் பேரிதுவே பேசார்தம்
மிச்சையிருப் பேகாந்தத்தே.

(இ-ள்.) துக்கம் சுகம் ஆன சுட்டு அறிவு கெட்டவர்க்குத்  திக்கு உண்டோ எங்கும் சிவாலயம் ஆம்- முன் கண்ட பிரபஞ்ச துக்கம் எல்லாம் இப்போது ஆநந்தமாகக் கண்ட அச்சுட்டுப்போதம் கெட்டோர்க்கு இன்ன திசை என்றும் இன்ன இடம் என்றும் பகுப்புண்டாமோ? அவர்க்கு எத்திசையும் எவ்விடமும் சிவாலயமே ஆகும்,அஃதன்றி,

அக்கினிக்குப் பிச்சை பொதுநிழல் நீர் பேரிதுவே பேசார்  தம் இச்சை இருப்பு ஏகாந்தத்தே – உதராக்கினி அவித்தற்கு ஊரின் கண் பிச்சையும் இருத்தற்கு இடம் பொதுச்சாவடி மரநிழலும், தாகந் தணித்தற்கு ஏரியாதி நீர்களும் உளவாகலின் அன்னம் இடம் நீர் என்னும் இவற்றினது பெயரையே சொல்லார், ஆயின், அவர்க்கு இச்சை தான் ஏது எனின், ஒருவரோடுங் கூடியிராது பேசாது ஏகாந்தத் திருப்பதே இச்சையாம்.

(வி-ரை.) சிவத்தை உணர்ந்தோர்க்கு எங்கும் பரிபூரணமாய்த் தோற்றும் ஆகலின், “எங்குஞ் சிவாலய மாம்” என்றார்.

இத்திருவெண்பாவால் பிரபஞ்சங்களையெல்லாம் ஆநந்தமயமாக் கண்ட துறவினர்க்குத் திசையாதி எவ்விடத்தும் சிவாலயமாகும் என்பதும், பிச்சையாதி உள வாகலின் அன்னபானாதி ஓரிடத்தில் குறியார் என்பதும், ஒருவரோடும் கூடாது ஏகாந்த மௌனத் திருப்பதே அவர்க்கு இச்சை என்பதும் அறிவித்தவாறு காண்க.

ஒருவரோடு கூடியிருந்து பேசுதலும் ஆகாதோ எனின், மேற் கூறுகின்றார்.