அங்கக்கா ரன்று திப்பு நாவிசுவை யான துவுஞ்
சிங்கி குளிர்ந்ததுவும் போற்செகத்தோர் – சங்கத்தைத்
தீண்டுமன மேபகையாய்ச் சேரா துடலோடே
மாண்டு திரி வார்துறவா வார்.
(இ-ள்.) அங்கக்காரன் துதிப்பும் நாவி சுவையானதுவுஞ் சிங்கி குளிர்ந்ததுவும் போல் செகத்தோர் – நானா வேடங்கொண்டு நடிக்கும் வேடதாரி அவ்வேடங்கட்கு ஏற்ற பாடை பேசுதல்போலவும், கொல்லாநின்ற வற்சனாபி ஒருவர்க்குச் சுவையானது போலவும், தன் காலிற் பூண்ட விலங்கு ஒருவர்க்கு இதமானது போலவும், தந்தம் சாதிகட்கும் தொழில்கட்கும் ஏற்ற சொற்களைச் சொல்லியும், துன்பமாயுள்ள விடயங்களை இன்பமாகக் கருதிக் கொண்டும், மனைவி முதலிய பாசவிலங்கை இதமாகக் கைக்கொண்டும் மயங்கிச் சுழலா நிற்பர் இச்சகத்தோர்,
சங்கத்தைத் தீண்டும் மனமே பகை ஆய்ச் சேராது உடலோடே மாண்டு திரிவார் துறவு ஆவார் – இங்ஙனம் சுழலா நின்றார் கூட்டத்தைக் கூடவேண்டு மென்று கருதும் மன நினைவே தம் பகையாகி அந்நினைவோடுங் கூடாது, உடலோடுங் கூடியிருந்துங் கூடாது, அவ்வுடல் வாதனை மாண்டு திரிவாரே துறவினை உடையராவர் என்றறிதி
(வி-ரை.) “உடலோடே மாண்டு திரிவார்” எனவே, போகவாதனை, தேகவாதனை, போதவாதனை ஆகிய இம் மூன்று வாதனையுந் தீர்ந்தார் என்பதாயிற்று.
இத்திருவெண்பாவால் பிரபஞ்சிகள் ஒருவரோடொருவர் கூடலும், நாநாவிதமாய் வார்த்தை யாடலுமே இன்பமாய்க் கருதி மயங்குவர் என்பதும், துறவோர் அங்ஙனஞ் செய்வது துன்பமென்று விடுப்பதுமன்றி, தம்முடலோடுங் கூடியுங் கூடாதிருப்ப ரென்பதும் அறிவித்தவாறு காண்க.