பிறவாத யோனி பிறந்து பிறந் தெல்லா
மறிவானா னாரென் றறியா – வறிவை
யறிந்துமீ னண்ட வழிபருந்திற் குஞ்சாய்ப்
பிறந்தவர்க ளேன் பார்ப்பார் பின்.
(இ-ள்.) பிறவாத யோனி பிறந்து பிறந்து எல்லாம் அறிவால் நான் ஆர் என்று அறியா அறிவை அறிந்து- தேவ மானுடப் பிறப்பன்றி, மற்றைப் பிறவாத யோனி பேதங்கள் எல்லாவற்றுள்ளும் அளவில் காலம் சென்று சென்று பிறந்து எய்த்து, பின்னர்த் தெய்வகதியாய்ப் பிறவிகட்கு எல்லாம் தப்பி, தன்னை அறிதற்கு ஏதுவாய இம் மானுடப் பிறவியிற் பிறந்தும், இத் தேகத்துள் இருந்து எல்லாவற்றையும் அறிவானாகிய யான் யாரென்று அறிதற்கு அரிதாய அறிவை இம்மானுடதேகம் அநேகத்தாற் செய்த சிவபுண்ணிய மேலீட்டால் இப்போது அறிந்து
மீன் அண்டவழி பருந்திற்கு குஞ்சு ஆய்ப் பிறந்தவர்கள் ஏன் பார்ப்பார் பின் -நீரில் நுழைந்து செல்லும் மீன் முட்டை வழித்தோன்றுங் குஞ்சு ஆகாயத்திற் செல்லும் பருந்தின் முட்டை வழித்தோன்றுங் குஞ்சாய்ப் பிறந்தது போல், பிறப்பிற்கு ஏதுவாய்ப் பிறந்த பிறப்புக்கள் நீங்கி, வீட்டிற்கு ஏதுவாய்ப் பிறந்தோர்கள் இப்போது மற்றையரைப் போலும் ஊர் உறவு என்று ஏன் பார்ப்பார் இப்போது?
(வி-ரை.) முட்டைவழித்தோன்றல் இரண்டிற்கும் ஒத்ததாயினும், முன் நீருட் சென்றதும், பின் ஆகாயத்திற் செல்வதும் ஒவ்வாதது போல், முன்னரும் இப்போதும் பிறந்த மானுடப்பிறப்பு ஒத்ததாயினும், முன் பிறப்பிற் சென்றதும், இப்போது வீட்டிற் செல்வதும் ஒவ்வாது, ஆகலின், இங்ஙனம் உவமை கூறினார்.
முற்பிறப்பில் சிவபுண்ணிய மேலீட்டால் இப்பிறப்பில் எளிதில் தன்னை அறிந்தமையால் “அறிந்து பிறந்தவர்கள்” என்றார்.
தன்னை அறிந்தால் தலைவனையும் அறியலாம் ஆகலின், “நானாரென்றறியா வறிவையறிந்து” என்றார்.
இங்ஙனம் ஊர் உறவாதி ஒன்றும் வேண்டார்க்குப் பெருமை தான் யாது எனின், மேற் கூறுகின்றார்.