அரசர்க் குடைமை யளவற்ற பேறே
பெருமையா னாற்போலப் பெற்ற – வரிபிரமர்க்
கப்பாலாம் வாழ்வு மணுவாகி யாதுமற
லிப்போ பெருமை யிவர்க்கு.
(இ-ள்.) அரசர்க்குப் பெருமை அளவு அற்ற பேறே உடைமை ஆனால் போல -அளவற்ற திரவியம் ஆடை பூஷணாதிகளைப் பெறும் பேறே அரசர்க்குப் பெருமையானாற் போல.
பெற்ற அரிபிரமர்க்கு அப்பால் ஆம் வாழ்வும் அணு ஆகி யாதும் அறல் இப்போ பெருமை இவர்க்கு – அவ்வரசர் முதலியோர் வாழ்விற்கு மேலாய வாழ்வினைப் பெற்ற அரி பிரமர் வாழ்விற்கும் அப்பாலாகிய பதமுத்தி வாழ்வுகளும் அணுமாத்திரம் இன்பமாய் அழியும் எனக் கண்டிருந்து அவ்இகபர வாழ்வுகளில் யாதொன்றினும் பற்றற்ற இப்பற்றறுதியே இவர்க்கு இப்போது பெருமையாம்.
(வி-ரை.) “அரசர்க்குடைமை” என்று பொதுப்படக் கூறினமையால், நால்வகைச் சேனை நால்வகை அரண், நானா தேசங்கள் முதலியவுங் கொள்க.
அவர்க்கு அப்பேறு மேன் மேல் பெறுவது பெருமை யானாற்போல், இவர்க்கு அப்பேறு மேன்மேல் விடுவது பெருமை என்பதும், அவர்க்கு அப்பேறின்மை சிறுமையாவது போல், இவர்க்கு அப்பேறு பெறுவது சிறுமை என்பதும், பேற்றின் மேல் பற்றுப் பிறவிக்கேது, அப்பேற்றின் மேல் பற்றறுதி வீட்டிற்கேது என்பதும்,பிறப்பை அடைதல் சிறுமை, வீட்டை அடைதல் பெருமை என்பதும் இதனாற் காண்க.
இங்ஙனம் இருந்த ஞானிகள் வீட்டிற்கு ஏதுவாகிய சரிதா திகளைத்தான் செய்யார்களோ எனின், அவர் செய்யுஞ் சரிதாதிகள் இவை என்று மேற் கூறுகின்றார்.