ஒழுவிலொடுக்கம்

189. சரிதை யுடல் வெறுத்த றன்னை யறிதல்

சரிதை யுடல் வெறுத்த றன்னை யறிதல்
கிரியோகங் கூடாமை கேளாத் – திருஞானம்
வேறின்மை பேரின்பம் விட்டு தியா மேலீடு
பேறின்மை தானே பெறல்.

(இ-ள்.) சரியை உடல் வெறுத்தல் தன்னை அறிதல் கிரி யோகங் கூடாமை – அவர்க்குச் சரியையாவது ,மலச்சுமை துக்கம் விளைக்கும் குரம்பை, அநித்திய விருது எனக்கண்டு, உண்டி சுருக்குதல் முதலியவற்றால் உடலத்தை வெறுத்தல். கிரியையாவது தத்துவம் முப்பத்தாறையும் நியதிகளைந்து அவற்றின் முடிவினின்ற தம்மை உள்ளபடி அறிதல், யோகமாவது அங்ஙனம் தம்மை அறிந்தவிடத்துத் தமக்கு உயிர்க்குயிராயிருந்த திருவருளைக் கண்டு அவ்வருளே வடிவாகியிருந்து முன் நீக்கி நின்ற கருவிகளோடுங் கூடாமை;

கேளாத் திருஞானம் வேறு இன்மை பேரின்பம் விட்டு உதியாமல் ஈடு பேறு இன்மை தானே பெறல் – அம்மூவ கையானும் உண்டாம் கேட்டறியலாகாத அழகிய ஞானமாவது அவ்வருளே வடிவாயிருந்த தாம் சிறிதும் தோன்றாது பரையே ஆகிய வேறின்மையினையும், அதன்மேல் பேரின்பம் விட்டுத் தோன்றாத மேலீட்டினையும், இவ்வின் பத்தைப் பெற்றோ மென்னும் பேறின்மையினையும் பெறுதல் தானேயாம்.

(வி-ரை.) ஞானாசாரியர் மௌன மொழியால் அறிவிக்க அறிதலான், “கேளாத்திருஞானம்” என்றும், இன்பமேலிடாமுன் விட்டுத்தோன்றலான் “விட்டு தியாமேலீடு” என்றுங் கூறினார். பேறின்மை – இன்பாதீதம்.

“கும்பிட்”டென்னும் திருவெண்பா முதல் இவையைந்து திருவெண்பாவானும் ஞானிகளினது இயற்கை நெறிகளினது முறைமை அறிவித்தவாறு காண்க.

ஏழாம் அதிகாரம் துறவு முற்றிற்று.