ஒழுவிலொடுக்கம்

200. கால்வந்த வர்க்காட்டங் கைவந்த வர்க்காட்ட

கால்வந்த வர்க்காட்டங் கைவந்த வர்க்காட்ட
மால் முந்தி வந்தவர் வாய்ப்பாட்டு – மேல் கொண்ட
வாநந்த வுல்லாசத் தாச்சரிய மாரறிவா
ரூனம்போற் காணு முலகு.

(இ-ள்.) கால் வந்தவர்க்கு ஆட்டம் கை வந்தவர்க்கு ஆட்டம் மால் முந்தி வந்தவர் வாய்ப்பாட்டும்- பிறவி முடவராயிருந்து இடையில் தெய்வகதியால் கால் நடக்க வந்தவர்க்கு ஆட்டமுண்டாவது போலுங், கைவராதிருந்து இடையில் அங்ஙனம் கைவந்தோர்க்கு ஆட்டமுண்டாவது போலுந், தாங்கூடி அநுபவித்த பெண்மேல் ஆசை தலைமீக்கொண்டு வந்தவர் வாய்ப்பாட்டுப்போலும்

மேல்கொண்ட ஆநந்த உல்லாசத்து ஆச்சரியம் ஆர் அறிவார் ஊனம்போல் காணும் உலகு- தம்மை மறைத்து மேற்கொண்டெழுந்த ஆநந்த உல்லாச அதிசயத்தால் அவர்க்கு ஆடலும் பாடலும் உண்டாம், அவ்வாநந்தாதிசயத்தை அதனைப்பெற்ற ஞானிகள் அறிவது அன்றி மற்றை யாரறிவார்? அவர்க்கு ஆடல் பாடல்களை பயித்தியமிகுதியால் உண்டாவனபோல் காண்பார் உலகத்தார்.

(வி-ரை.) நெடுநாள் காலுங்கையும்வராதிருந்து இடையில் அவைவந்தோர்க்கு ஆட்டம் உண்டாவது போல், அளவிறந்தகாலம் மும்மலச்சிறையிற் கிடந்தோர்க்கு இப்போது அச்சிறை விடுதலையாய்ப் பரிபூரண வடிவைப் பெற்றமையான் இவர்க்கு ஆடலும், தாம் அநுபவித்தபெண் இன்பவாசனை உளத்திருத்தலான் அவர்க்குப் பாடல் உண்டாவது போல், துன்ப போகத்தையே அளவில் காலம் புசித்தோர்க்கு இப்போது நிரதிசயாநந்தங் கிடைத்தமையால் பாடலும் உண்டென்பது இவ்வுவமைகளாற் காண்க.

“ஊனம்போல்” என்றமையால் ஊனம் அன்றென்ப தாயிற்று. உலகென்பது ஆகுபெயர்.

“கை வந்த வர்க்காட்டம்” என்பதற்கு அருத்தம் ஓர் வித்தையாதி முன் கைவரா திருந்து பின் கை வந்தபோது ஆட்டம் உண்டாவது போலும் என்கினும் ஆம்.

“ஆநந்த” மௌனமதனை அடைந்த ஞானிகள் போதம் இழந்தோராகலின்.

இத்திருவெண்பாவால் ஞானிகட்குப் பூரணவடிவம் பெற்றமையால் ஆடலும், ஆநந்தம் பெற்றமையால் பாடலும் உண்டாம் என்று அறிவித்தவாறு காண்க.

இங்ஙனம் நிர்விகாரிகளா யிருந்தோர்க்கு அந்த விகாரிகள் போலும் ஆடல் பாடல் எங்ஙனம் உண்டாம் எனின், மேற்கூறுகின்றார்.