அறிவு பறிகொடுத்திவ் வாக்கையற மாறிப்
பெறுதி யிழப்பு தியாப் பித்தி – னறிசென்
றலையற்ற நீத்தமோ ராளற்ற கப்ப
லுலைவுற்ற தோநிற்ப தோ.
(இ-ள்.) அறிவு பறிகொடுத்து இவ்வாக்கை அறமாறிப் பெறுதி இழப்பு உதியாப் பித்தின் அறி சென்று – முன்னர் விடயாநந்தத்திற்குத் தமது அறிவைப் பறிகொடுத்தது போல் இப்போது மாறிச் சொரூபாநந்தத்திற்கு அவ்வறிவைப் பறிகொடுத்து, முன்னர்க் கூடியிருந்த இம்மாயா வடிவ மறந்து போக, இப்போது அருள் வடிவாய் மாறிப்பெற்று, அவ்வருளே வடிவாகலின் ஓர்பொருளைப் பெற்றோமென்னும் பெறுதியும், ஓர் பொருளை இழந்தோமென்னும் இழப்பும், இவற்றான் வரும் இதாகிதங்களும் தோன்றாத ஆநந்தப் பயித்தியம் மீக்கொண்டு, ஓரிடத்துச் சிறிதேனும் விகார முண்டாகாது இதனை அறிவில் சென்று பார்த்தறிதி, இஃதன்றி
அலை அற்ற நீத்தம் ஓர் ஆள் அற்ற கப்பல் உலைவு உற்றதோ நிற்பதோ- அலையின்றிய சாகரத்தில் நிற்கும் ஓராளும் இன்றிய கப்பல் அசைவுறுகின்றதோ? அசைவற்று நிற்கின்றதோ? அஃது எங்ஙனம் அசைவற்று நிற்கின்றது, அதுபோலும் மௌனாந்த சாகரத்தில் முப்பத்தாறு தத்துவங்களும் தற்போதமும் இறந்து நின்ற ஞானிகளும் அசைகிலர் என்று இத் திட்டாந்தத்தானும் கண்டு கொள்க.
(வி-ரை.) அலையற்ற நீத்தத்தை மௌனாநந்தத்திற்கும், ஆளற்றிருத்தலைக் கருவிகளிறந்து நிற்றற்கும், அசைவற்ற கப்பலைப் போதமிறந்த ஞானிகளது அறிவிற்கும், உவமித்தார். அறிவு பறிகொடுத்தல்;ஆனந்தமயமாய் அழுந்தல். இன்னுங் கூறுகின்றார்.