ஒழுவிலொடுக்கம்

206. கேடுஞ் சுகமு முதலெல்லாங் கீழ்ப்படுத்திக்

கேடுஞ் சுகமு முதலெல்லாங் கீழ்ப்படுத்திக்
கூடுஞ் சுகம்போலக் கொள்ளாதே – நாடுநகும்
பூனைக்கண் ணேரி பொருப்பேறி போலுச்சிப்
பானுப்போ னீயவரைப் பார்.

(இ-ள்.) கேடும் சுகமும் முதல் எல்லாம் கீழ்ப்படுத்திக் கூடும் சுகம்போலக் கொள்ளாதே – துக்கமும் சுகமும் இவற்றிற்கு முதலாய் உள்ள தேகாதி பிரபஞ்சமெல்லாமும் கீழ்ப்படுத்தி நீக்கி, நேயத்தைக் கூடும் பரமுத்தர் குணம்போலச் சீவன் முத்தர் குணத்தை நீ கருதிக்கொள்ளாதே,அஃது எங்ஙனம் எனின்

நாடு நகும் பூனைக்கண் ஏரி பொருப்பு ஏறிபோல் உச்சிப் பானுப்போல் நீ அவரைப்பார் – நாட்டின் கண் உள்ளார் பார்த்து நகையாநின்ற இருட்டைச் சிறிதேனும் இன்றி இரவினும் அறியும் பூனையினது கண்ணைப் போலும், ஏரிகரைமேல் ஏறினோனைப்போலும், மலைமேல் ஏறினோனைப்போலும், மத்தியானத்துச் சூரியனைப்போலும், நீ அச்சீவன் முத்தர் அறிவையும் பார்த்தறிதி.

(வி-ரை.) பூனைக் கண்ணிற்கு இரவினும் பகலினும் பொருள்கள் தோன்றுவன போலும், ஏரிகரைமேல் ஏறிக்கு இருபாலும் தோன்றுவன போலும், பொருப்பேறிக்கு நிலத்திற் பொருளும் பொருப்பிற் பொருளும் தோற்றுமா போலும், உச்சிப்பானுவிற்கு உதயமாகுந் தானமும் அத்த மிக்குந் தானமும் தோற்றுமா போலும், பிறப்பில் துன்பமும் வீட்டில் இன்பமும் அவர்க்குத் தோற்றும். ஆகலின், இங்ஙனம் உவமை கூறினார்.

இருளான் அறியுங்கண்ணிற்கு ஒளியிற் பொருள் தோற்றாதது போல் பெத்தர்களென்பதும், ஒளியான் அறியுங் கண்ணிற்கு இருளிற் பொருள் தோற்றாதது போல் பரமுத்தரென்பதும், இருளினும் ஒளியினும் அறியுங் கண்ணைப்போல் சீவன் முத்தரென்பதும், ”பூனைக்கண்” என்னும் உவமைக் குறிப்பாற் காண்க.

பரமுத்தர் தநுவாதிகளை நீக்கி நேயத்தழுந்தினோர். சீவன்முத்தர் தநுவாதிகளோடு கூடியுங் கூடாமல் நின்று நேயத்தழுந்தினோர். ஆகலின், இச்சீவன் முத்தராவார் இவரென்று இதனுட் பகுத்தறிவித்தார்.

ஏரி யென்பதனைக் கரைமேலேறி யென்பதனோடுங் கூட்டுக.

“நாடுநகும்” என்பது பூனைக் கண்ணிற்கு அடை,

இத்திருவெண்பாவால் சீவன் முத்தராய மெய்ஞ்ஞானிகள் சகமுகமும் அகமுகமும் தோன்றப் பற்றாது பார்த்து அறிவரென்று அறிவித்தவாறு காண்க.

ஞானிகளாயினோர் மௌனமா யிருப்பதன்றி  இவர் ஆடலாதிகளைச் செய்வது என்னை என்று சரியாதியினிற் போர் சொல்லார்களோ எனின், மேற்கூறுகின்றார்.