சூலையும் பேயும் பிடித்துழல்வார் சும்மாநம்
போலறிவீ ரென் றுரைத்த புத்திபோன் – மூல
விருளான் மறந்தறிவா ரீதென்றா னென்பா
ரருளா லறிந்தறிவா ரை.
(இ-ள்.) சூலையும் பேயும் பிடித்து உழல்வார் சும்மா நம்போல் அறிவீர் என்று உரைத்த புத்திபோல்-பொது மாதர் கூட்டுரவான் வரும் சூலைநோயும், நற்குணத்தை மாறுபடுத்தும் பேயும் பிடித்து, அவற்றான் வருந்தி சுழல்வார் இச்சூலையும் பேயுங்கொண்டு, சும்மா எமதறிவைப் போல் நீரும் அறிவீர் என்று நற்குணத்தோர்க்கு சொன்ன புத்திபோல்,
மூல இருளால் மறந்து அறிவார் ஈது என் என்பார் அருளால் அறிந்து அறிவாரை – மூல மலவிருளால் தம்மை மறந்து மாயா காரியமாகிய தநுவாதிகளை யான் எனதென்று அறிவார், அருளால் அத் ததுவாதிகளைப் பொய்யென்றறிந்து நீங்கித் தம்மையும் தமக்குரிய பேரின்பத்தையும் அறிந்துளாரைப் பார்த்து, பித்தரைப் போல் நீர் செய்யும் ஆடல் பாடல்கள் இதென்னை என்று சொல்வர்; அது கொண்டு இவர்க்கோர் இகழ்ச்சியும் இன்று .
(வி-ரை.) சூலையும் பேயும் பிடித்துளோர் புத்தியை அவை பிடியாத நற்குணத்தோர் கேளாதது போல், சகல கேவலத்தில் நிற்போர் சொற்களை அவற்றை நீங்கிச் சுத்தத்தில் நிற்போர் கேளாரென்பது இவ்வுவமையான் அறிக.
சூலையும் பேயும் என்றது ஏகதார விரதியாய் இலிங்கவிரதியா யிருப்போர்க்குப் பொதுமாதர் கூட்டுரவும் ஐவரரசர் முதலிய மருளேற்றிக் கொள்வது நன்றென்று பிறர் கூறுவன போல் என்பதும் ஆம்.
இத்திருவெண்பாவால் மெய்ஞ்ஞானிகளது ஆடலாதிகளைக் கண்டு கருமிகள் பழிப்பினும் அது பழிப்பின் பாற்பட்டது அன்றென்று அறிவித்தவாறு காண்க.
ஞானிகள் மகிமையை உலகத்தாருஞ் சரியையாதியினிற்போரும் அறியாதிருத்தல் ஏன் எனின், மேற் கூறு கின்றார்.